இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், அணியின் கட்டுப்பாட்டு விதிகளை மீறிய விவகாரத்தில் சிக்கியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, ஸ்டோக்ஸ் மற்றும் சக வீரர் கஸ் அட்கின்சன் இரவு நேர கட்டுப்பாட்டை மீறி நைட் கிளப்பில் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு ரக்பி வீரர் டொடோவா அவ்வாவுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் அணியின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்து தையல் போட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அணியின் ஒழுக்கம் மீதான கேள்விகள் எழுந்துள்ளன. ஈசிபி மற்றும் கிரிக்கெட் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை நடத்தி வருகின்றன. ஸ்டோக்ஸ் மற்றும் அட்கின்சனுக்கு அபராதம் மற்றும் இடைநீக்கம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 15 ஆண்டுகளாக நீடித்து வரும் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ஸ்டோக்ஸ் தீவிரமாக யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தனது முகவர் நீல் ஃபேர்பிரதருடன் ஆலோசனை நடத்த உள்ளார். அந்த சந்திப்பில் முழுமையான ஓய்வு, கேப்டன் பதவியிலிருந்து விலகுதல் அல்லது காலவரையற்ற இடைவெளி எடுப்பது போன்ற விருப்பங்களை பரிசீலிக்கலாம் என கூறப்படுகிறது.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 17ஆம் தேதி கியா ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. அதற்கு முன்பாகவே புதிய வீரர் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது.
ஸ்டோக்ஸ், தனது அணித்தோழர்களுக்கு இந்த சம்பவம் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து கவலைப்படுவதாகவும், தாமதமாக வெளியில் சென்றது தவறு என்பதை உணர்ந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரத்தை கையாண்ட விதம் குறித்தும் அவர் திருப்தியடையவில்லை என கூறப்படுகிறது.
பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவாரா அல்லது கேப்டனாக தொடர்வாரா என்பது குறித்து அடுத்த சில நாட்களில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.