சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன், கோடம்பாக்கம் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முதலில், கோடம்பாக்கம் மண்டலம் வார்டு-130, ஆற்காடு சாலையின் இருபுறமும் ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். பருவமழை தொடங்குவதற்கு முன்னரே பணிகளை முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அண்ணாநகர் மண்டலம் வார்டு-102, செனாய் நகர் கிரசன்ட் பூங்காவில் அடிப்படை வசதிகள் குறித்துப் பார்வையிட்டார். பொதுமக்கள் பூங்காவினைப் பயன்படுத்தும் வகையில் நடைபயிற்சி பாதை, இருக்கைகள், பசுமைப் பரப்பை அதிகரிக்க மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு பூங்காவினை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

பின்னர், செயற்கை புல் தரை விளையாட்டுத் திடலை ஆய்வு செய்து, தினசரி பயன்படுத்தும் பயனாளிகள் விவரம் மற்றும் பராமரிப்பு குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். உடற்பயிற்சிக் கூடத்தையும் பார்வையிட்டு, அங்கு உள்ள உபகரணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ச்சியாக, மாநகராட்சி ஆணையாளர் 102வது வார்டு அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்-அமைச்சரின் உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் செயல்பாட்டினைப் பார்வையிட்டார். உணவினை குறித்த நேரத்தில் வழங்கி, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், மண்டல அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.