மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு: டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

புதுடெல்லி: மத்தியப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்ததைக் கண்டித்து, டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் இன்று தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான அக்பர் சாலையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பத்வாரி, அம்மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உமாங் சிங்கார் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கடுமையான கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சியினர் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனர். ஆனால், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தடுப்புகளை அமைத்து அவர்களைத் தடுத்து நிறுத்தினர். தடுப்புகளை அகற்றக் கட்சியினர் முயன்றதால், அந்த இடமே போர்க்களமாக மாறியது. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய உமாங் சிங்கார், “மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமானது. இது தொடர்பாகக் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து முறையிட நாங்கள் அனுமதி கோரியிருந்தோம், ஆனால் அவர் எங்களைச் சந்திக்க மறுத்துவிட்டார். அவர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர், ஆனால் அவர் ஆளும் கட்சியின் பிரதிநிதியைப் போலச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும் பொறுப்பு அவருக்கு இல்லையா? நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வது அவரது கடமையல்லவா?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

மீனாட்சி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தேர்தல் ஆணையம் தனது நடுநிலையை முழுமையாக இழந்துவிட்டது என்பதை நான் ஏற்கனவே கூறி வருகிறேன், அது இன்று மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இந்த வழக்கிற்கும் மாநில அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், விசாரணையின்போது மாநில அரசின் வழக்கறிஞர்கள் ஆஜரானது வியப்பை அளிக்கிறது. நாங்கள் தேர்தலை நடத்துபவர்களின் நேர்மையைத்தான் கேள்வி கேட்கிறோம். மக்கள் முன்னிலையில் இவர்களின் நடவடிக்கைகள் அம்பலமாகிவிட்டன” என்று விமர்சித்தார்.

என்ன நடந்தது? மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை இடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக இரு இடங்களிலும், காங்கிரஸ் ஓரிடத்திலும் வெற்றி பெற வாய்ப்புள்ள நிலையில், பாஜக மூன்றாவது வேட்பாளரையும் களமிறக்கியது. அதேநேரத்தில், காங்கிரஸ் சார்பில் மீனாட்சி நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஹைதராபாத் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு குற்ற வழக்கு குறித்த விவரங்களை வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என்று கூறி, தேர்தல் அதிகாரிகள் அவரது மனுவை நிராகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள், தலைமை தேர்தல் ஆணையரைச் சந்தித்து, மனுவை மீண்டும் ஏற்கக் கோரி மனு அளித்திருந்தனர். ஆனால், கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழல், மாநிலங்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதைக் காட்டுகிறது.