விழுப்புரம்:
பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த உள்கட்சி மோதல் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசையும், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாசையும் சந்தித்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. கட்சியின் நிர்வாக கட்டுப்பாடு, முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம், கட்சியின் எதிர்கால அரசியல் திசை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்த கருத்து வேறுபாடு பின்னர் வெளிப்படையான அரசியல் மோதலாக மாறியது. இரு தரப்பினரும் பாமக தங்கள் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது என்று தனித்தனியாக அறிவித்து வந்தனர். கட்சியின் உண்மையான தலைமையுரிமை யாருக்கு என்பதையும், நிர்வாக அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதையும் மையமாகக் கொண்டு சட்டப்போராட்டமும் தொடங்கப்பட்டது.
இதற்கிடையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் ராமதாஸ் மற்றும் அன்புமணி அணிகள் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தியதால், பாமக ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்விகளும் எழுந்தன. இதனால் பாமகவுக்குள் நிலவி வந்த மோதல் மேலும் தீவிரமடைந்தது.
இந்த சூழ்நிலையில், இன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் டாக்டர் ராமதாசை அவரது மகன் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்தார். தந்தை – தாய் திருமணத்தின் 61-வது ஆண்டு விழாவையொட்டி குடும்பத்தினருடன் சென்ற அன்புமணி, ராமதாசை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, நீண்ட நாட்களுக்குப் பிறகு நேருக்கு நேர் சந்தித்த தந்தை மற்றும் மகன் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்ட காட்சி அங்கு இருந்தவர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. மகன் அன்புமணியை ராமதாஸ் அன்புடன் வரவேற்றதாக கூறப்படுகிறது. பின்னர் அன்புமணி தனது தாய் மற்றும் தந்தையிடம் ஆசி பெற்றார்.
இந்த சந்திப்பு வெறும் குடும்ப நிகழ்வாக மட்டுமின்றி, அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. காரணம், கடந்த ஓராண்டாக நீடித்து வந்த மோதலுக்கு பிறகு இருவரும் நேரில் சந்தித்திருப்பது பாமக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “இனி நல்லது நடக்கும்” என்று சுருக்கமாக பதிலளித்தார். அவரது இந்த ஒரு வரி கருத்து பல்வேறு அரசியல் அர்த்தங்களை உருவாக்கியுள்ளது. பாமகவில் நீடித்து வந்த பிளவு முடிவுக்கு வருகிறதா?, மீண்டும் தந்தை – மகன் இணைந்து கட்சியை வழிநடத்தப்போகிறார்களா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன.
கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்காகவும், தொண்டர்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டும் சமரச முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், இன்றைய சந்திப்பு அதற்கான முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
பாமக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் இந்த சந்திப்பை வரவேற்றுள்ளனர். நீண்டகாலமாக நீடித்து வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கட்சியை ஒருங்கிணைந்த பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இதனால், தைலாபுரத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு பாமக அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமையுமா என்பது எதிர்வரும் நாட்களில் தெரியவரும்.