புதுடெல்லி:
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுவது மற்றும் தனிப்பட்ட முறையில் மருத்துவத் தொழில் செய்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள கருத்து நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது. அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழில் செய்யக்கூடாது என்ற நோக்கம் மிகவும் நல்லது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் செயல்பட்டு வரும் மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையின் செயல்பாடுகள் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று விசாரணையில் உள்ளது. அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் சிலர் விதிமுறைகளை மீறி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு தொடங்கப்பட்டது.
வழக்கின் விசாரணையின்போது, மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் பலரும் தனியார் நர்சிங் ஹோம்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்றி வருவதாகவும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து கடந்த மே மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் கடும் கவலை தெரிவித்தது. அரசு போதுமான நிதி, கட்டமைப்பு வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கியிருந்த போதிலும், மருத்துவர்களின் இந்த நடவடிக்கைகள் காரணமாக அரசு மருத்துவமனைகளின் தரம் மற்றும் சேவை பாதிக்கப்படுவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும் தனியார் மருத்துவப் பணிகளில் ஈடுபடும் அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், உயர்மட்ட விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
இந்த விசாரணைக்கு தடை கோரி மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரியின் அறுவை சிகிச்சைத் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் சந்தோஷ்குமார் சிங் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார். அவரது மனு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது நீதிபதிகள், உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று தெளிவாக தெரிவித்தனர். அரசு மருத்துவர்களின் தனியார் மருத்துவப் பணி தொடர்பான பிரச்சினை பொதுநலன் சார்ந்த முக்கிய விவகாரம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
நீதிபதி பி.வி. நாகரத்னா தனது கருத்தில், “உயர்நீதிமன்றம் மிக முக்கியமான பொதுநலன் சார்ந்த பிரச்சினையை கையாள்கிறது. அரசு மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் மருத்துவத் தொழில் செய்யக்கூடாது என்ற நோக்கம் மிகவும் பாராட்டத்தக்கது. இந்த நடவடிக்கை ஒரே ஒரு மருத்துவருக்கு எதிரானது அல்ல. விதிமுறைகளை மீறி தனியார் மருத்துவப் பணிகளில் ஈடுபடும் அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் பொருந்தக்கூடியது” என்று தெரிவித்தார்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரதாப் சர்மா மனுவை திரும்பப் பெற அனுமதி கோரினார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை திரும்பப் பெற அனுமதித்து வழக்கை முடித்துவைத்தனர்.
இந்த தீர்ப்பின் மூலம் அரசு மருத்துவர்களின் தனியார் மருத்துவப் பணி தொடர்பான விவகாரத்தில் உயர்நீதிமன்ற விசாரணை தொடர வழிவகை ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளின் சேவை தரத்தை மேம்படுத்தவும், நோயாளிகளின் நலனை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது.