சென்னை:

மதுரை மேலூரில் நடைபெற்ற ‘விரா’ (ViRa) விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் மயக்கமடைந்த மாணவிகளுக்கு முதலுதவி செய்த சம்பவத்தை அரசியல் நோக்கத்துடன் விமர்சித்ததாக குற்றம்சாட்டி, பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை உயர் கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 56-வது பிறந்தநாள் மற்றும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மேலூரில் புகையிலை, மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக ‘விரா’ என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று 4 கிலோமீட்டர் தூரம் ஓடிய நிலையில், கடும் வெயில் காரணமாக சில மாணவிகள் மயக்கமடைந்து கீழே விழுந்ததாக கூறியுள்ளார். அப்போது மனிதாபிமான அடிப்படையில் அவர்களை தூக்கி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று தண்ணீர் தெளித்து முதலுதவி செய்ததாகவும் விளக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் திமுக ஐடி விங் சமூக வலைதளங்களில் தவறான நோக்கத்துடன் சித்தரித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். மாணவிகளுக்கு உதவி செய்த ஒரு மனிதாபிமான செயலுக்கு அரசியல் நிறம் பூசி இழிவுபடுத்துவது மிகவும் அநாகரிகமான செயல் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் திமுக ஆட்சி முடிவுக்கு வந்து, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை முதல்வர் ஜோசப் விஜய் வழங்கி வருவதை எதிர்க்கட்சிகள் சகித்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விஸ்வநாதன் கூறியுள்ளார். அதனால் தான் ஆளும் அரசை விமர்சிக்க திட்டமிட்டு சமூக வலைதளங்களில் தவறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

அறிக்கையில் மேலும் பேசிய அவர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு அன்பில் மகேஸ் இதுவரை பதில் அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் வெளியிட்ட குற்றச்சாட்டுகளுக்கும் அவர் விளக்கம் அளிக்காத நிலையில், தற்போது அரசியல் விமர்சனங்களில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்தார்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரதிநிதியாக அமைச்சரவையில் உள்ள தன்னை குறிவைத்து தொடர்ந்து விமர்சிப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். சமூக வலைதளங்களில் இழிவான பதிவுகள் மூலம் அரசியல் லாபம் தேட முயற்சிப்பவர்கள் தங்களது அரசியல் தரத்தை மட்டுமே தாழ்த்திக்கொள்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.

இறுதியாக, இதுபோன்ற தவறான மற்றும் அவதூறு பிரசாரங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அமைச்சர் விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது இந்த அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.