புதுடெல்லி:
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நோக்கில் நடைபெற்ற இரண்டு நாள் உயர்மட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் சந்தித்து இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டனர். அப்போது, வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக இறுதி செய்ய இரு தலைவர்களும் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார். இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழுவுடன் அவர் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது வர்த்தக தடைகள், முதலீட்டு வாய்ப்புகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, ஏற்றுமதி – இறக்குமதி வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தை நிறைவடைந்ததைத் தொடர்ந்து தனது எக்ஸ் தள பதிவில் கருத்து தெரிவித்த பியூஷ் கோயல், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் மற்றும் அவரது குழுவினருடன் நடைபெற்ற சந்திப்புகள் பயனுள்ளதாக அமைந்ததாக கூறினார். இந்தியா – அமெரிக்கா இடையிலான தற்போதைய வர்த்தக பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்ததுடன், பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வழிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், ஆக்கப்பூர்வமான மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த ஜேமிசன் கிரீரின் தலைமையையும், இரு தரப்பு அதிகாரிகளின் முயற்சிகளையும் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஜேமிசன் கிரீர், அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இடையே சிறப்பான உறவு நிலவி வருவதாக தெரிவித்தார். பல ஆண்டுகளாக உருவாகியுள்ள இந்த உறவு தற்போது புதிய உயரத்தை நோக்கி செல்கிறது என்றும் அவர் கூறினார்.
இந்தியா விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளில் வலுவான அடித்தளத்தை கொண்டிருப்பதோடு, தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளிலும் வேகமாக முன்னேறி வருவதாக ஜேமிசன் கிரீர் பாராட்டினார். எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் உலகளாவிய வர்த்தக வாய்ப்புகளில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா – அமெரிக்கா வர்த்தக உறவு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக அமெரிக்கா திகழ்ந்தது. அந்த ஆண்டில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 87.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், அமெரிக்காவிலிருந்து இந்தியா மேற்கொண்ட இறக்குமதியும் 52.9 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இரு நாடுகளும் விரைவில் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நோக்கில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதால், இந்த ஆலோசனை முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.