சென்னை: ஆளுநர் நியமனம் தொடர்பாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்பின் அடிப்படை புரிதல் இல்லாமல் அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் போல சி.டி.ஆர். நிர்மல் குமார் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தங்களது சொந்தக்காரர்களைக் கூட ஆளுநர்களாக நியமிக்கலாம்” என்ற அமைச்சர் நிர்மல் குமாரின் கருத்து பொறுப்பற்றதும் கண்டனத்திற்குரியதுமாகும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், “பாரத மக்களை குடும்பமாகக் கருதி பல ஆண்டுகளாக மக்கள் சேவையில் தங்களை அர்ப்பணித்துள்ள பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் மாண்பைக் குறைக்கும் வகையில் பேசுவது, அமைச்சரின் அரசியல் அறிவின்மையையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் ஆளும் கட்சியினரின் செயல்பாடுகள் குறித்து மக்கள் கவனம் செலுத்தாமல் இருக்கவே இத்தகைய கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

அமைச்சர் நிர்மல் குமார் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அரசு பொறுப்பில் உள்ளவர்கள் ஆதாரமற்ற மற்றும் அரைகுறை விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “கவர்னர் பதவியே தேவையில்லை என்று கூறும் நீங்கள், தேர்தலுக்குப் பிறகு ஆட்சியமைக்க எத்தனை முறை ஆளுநர் மாளிகைக்கு சென்றீர்கள்? யாரை யாரை தொடர்புகொண்டீர்கள்? என்ற விவரங்களை வெளியிட வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் லாபத்திற்காக இதுபோன்ற ‘அரசியல் ஸ்டண்ட்’ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.