புதுடெல்லி:
பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானைச் சுற்றி புதிய அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. சீக்கிய மதகுருமார்களின் படங்களை அவமதித்ததாக கூறப்படும் வீடியோ தொடர்பாக, பகவந்த் மான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான ஒரு வீடியோவில், சீக்கிய மதகுருமார்களின் படங்கள் மீது மது தெளிக்கும் காட்சி இடம்பெற்றதாக கூறப்பட்டது. அந்த வீடியோவில் இருப்பவர் பகவந்த் மான்தான் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் அதை திட்டவட்டமாக மறுத்தார். மேலும், அந்த வீடியோ போலியானது என்றும், சீக்கிய மதத்தை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுவதை தன்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த விவகாரம் பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சீக்கியர்களின் உயரிய மத அமைப்பான அகால் தக்த் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டது. விசாரணைக்கு பிறகு, பகவந்த் மானை சீக்கிய சமூகத்திற்கு எதிராக செயல்பட்டவர் என அறிவித்து நடவடிக்கை எடுத்ததாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில், தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்கும் வகையில், இரண்டு தடயவியல் ஆய்வகங்களின் அறிக்கைகளை பஞ்சாப் அரசு சமர்ப்பித்ததாக கூறப்பட்டது. அந்த அறிக்கைகளில் வீடியோ போலியானது என குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது.
ஆனால் இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக, ஹரியானா காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், அந்த தடயவியல் அறிக்கைகள் உண்மைத்தன்மை அற்றவை என சந்தேகம் எழுந்துள்ளது. போலியான தடயவியல் மற்றும் டிஜிட்டல் பகுப்பாய்வு அறிக்கைகளை தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட டெல்லியை சேர்ந்த அங்கித் மற்றும் பஞ்ச்குலாவை சேர்ந்த அருண் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குருகிராம் போலீசார் வெளியிட்ட தகவலின்படி, டிஜிட்டல் ஆதாரங்களை திரித்து, தவறான அறிக்கைகளை தயாரிக்க சதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.10 லட்சம் வரை பணம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த கைது நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாஜக தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பஞ்சாப் காவல்துறையின் சில உயர் அதிகாரிகள் போலியான அறிக்கைகளை தயாரிக்க உதவியதாகவும், பகவந்த் மான் தனது அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், சீக்கிய சமூகத்தையும் அகால் தக்த் அமைப்பையும் அவமதித்ததாக கூறி, பகவந்த் மான் மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலும் இந்த விவகாரத்தில் மவுனம் காக்கக் கூடாது என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள பகவந்த் மான், இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவை சீக்கிய சமூகமே எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தன்னை மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதி என்றும், உண்மைகள் வெளிவரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் பஞ்சாப் அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ள நிலையில், விசாரணையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.