அரசுப்பள்ளி மாணவர்களை துப்புரவுப் பணியாளர்களாக நடத்தும் அவலம் எப்போதுதான் மாறும்? – தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!
சென்னை: திருப்பத்தூர் மாவட்டம் கேதாண்டப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், கழிவுநீர் அடைப்பை சரிசெய்யும் பணியில் பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அரசுப் பள்ளிகளில் உடனடியாகத் தேவையான தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
கடந்த சில தினங்களுக்கு முன்பு, “குழந்தைகள் பள்ளிகளை சுத்தம் செய்வதில் எந்தவொரு தவறும் இல்லை” என்ற ரீதியில் பேசப்பட்ட கருத்துகள் பெரும் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகின. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் கேதாண்டப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏற்பட்டுள்ள கழிவுநீர் அடைப்பைச் சரிசெய்யும் கடினமானப் பணியில், அங்கு பயிலும் அப்பாவி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்க ஒரு செயலாகும்.
கல்வி கற்க வேண்டிய வயதில், தாங்கள் அதிகார வர்க்கத்தால் சுரண்டப்படுகிறோம் என்பது கூடத் தெரியாமல், “எங்கள் தலைமை ஆசிரியர் தான் இந்த வேலையைச் செய்யச் சொன்னார்; பள்ளியில் எப்போதுமே இந்த மாதிரி வேலையை நாங்கள் தான் செய்வோம்” என்று அம்மாணவர்கள் மிகுந்த அப்பாவித்தனமாகக் கூறும் காட்சிகளைக் காணும்போது, ஒரு தந்தையாக என் நெஞ்சம் கனத்துப் போகிறது.
பள்ளிக்கூடத்திற்குப் பாடம் படிக்க வரும் பிஞ்சுப் பிள்ளைகளை, இதுபோன்று சுகாதாரமற்ற துப்புரவுப் பணிகளிலும், கழிவுநீர் அடைப்பை எடுக்கும் வேலைகளிலும் ஈடுபடுத்துவது முற்றிலும் மனிதாபிமானமற்ற செயலாகும். அதுமட்டுமன்றி, இது குழந்தைகளின் அடிப்படை உரிமைகளுக்கும், கண்ணியமான வாழ்விற்கும் முற்றிலும் எதிரானது. அரசுப் பள்ளிகளில் போதிய உள்கட்டமைப்பும், தூய்மைப் பணியாளர்களும் இல்லாத நிலையே இதுபோன்ற அவலங்களுக்கு முதன்மைக் காரணமாக அமைகிறது.
எனவே, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தேவையான துப்புரவுப் பணியாளர்களை உடனே நியமிக்க வேண்டும். மாணவர்களின் கண்ணியத்தையும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்.
மேலும், தனியார் பள்ளிகளை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், அரசுப் பள்ளிகளின் நிலையையும் உணர்ந்து, இனிவரும் காலங்களில் எந்தவொரு அரசுப் பள்ளியிலும் இதுபோன்ற அவலச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கப் பள்ளிக்கல்வித் துறை உடனடியாகத் தக்க மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.