தூய்மையான, பசுமையான சென்னையை உருவாக்க ஒத்துழைப்பு தாருங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் வேண்டுகோள்!

சென்னை: தூய்மையான மற்றும் பசுமையான சென்னையை உருவாக்குவதில் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து செயல்படுமாறு அனைத்துப் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களுக்கும் மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், திடக்கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்றாதவர்களுக்கு கடந்த 23 நாட்களில் ரூ.5.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தல்: தமிழ்நாட்டில் அறிவியல் ரீதியிலான திடக்கழிவு மேலாண்மைப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வதற்கு ஏதுவாக, திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே அவற்றை முறையாக தரம் பிரித்து பெற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சி முழுவதும் கழிவுகளைத் தரம் பிரித்து அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, மக்களிடையே பரவலாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கீழ்ப்பாக்கத்தில் திடீர் களஆய்வு: இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் இன்று (24.07.2026) அண்ணாநகர் மண்டலம், வார்டு-100க்கு உட்பட்ட கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள குஷால் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் திடீர் களஆய்வு மேற்கொண்டார்.

அங்குள்ள பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் (Bulk Waste Generators – BWGs) திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ன் வழிகாட்டுதல்களைச் சரியாகப் பின்பற்றுகின்றனரா என்பது குறித்து அவர் நேரில் பார்வையிட்டார்.

நான்கு வண்ணக் குறியீட்டு முறைகள்: இந்த ஆய்வின் போது, பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) இணையதளங்களில் கட்டாயப் பதிவை மேற்கொண்டுள்ளனரா என்று சரிபார்க்கப்பட்டது.

மேலும், கழிவுகள் உருவாகும் இடத்திலேயே:

  • மக்கும் குப்பை

  • மக்காத குப்பை

  • சுகாதாரக் கழிவுகள்

  • அபாயகரமானக் கழிவுகள்

என நான்கு வகைகளாகப் பிரிப்பதற்காகப் பச்சை, நீலம், சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய நான்கு வண்ணக் குறியீட்டு குப்பைத் தொட்டிகள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். மக்கும் கழிவுகளை வளாகத்திலேயே உரமாக்கும் (Composting) அல்லது உயிரி எரிவாயு (Bio-Gas) நிலையங்கள் மூலம் பதப்படுத்தும் வசதிகள் செயல்படுகிறதா என்பதையும் அவர் பார்வையிட்டார்.

ரூ.5.10 லட்சம் அபராதம் மற்றும் எச்சரிக்கை: ஆய்வின் போது குடியிருப்போருடன் கலந்துரையாடிய ஆணையர், கழிவு மேலாண்மையில் உள்ள குறைபாடுகளைக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சரிசெய்ய அறிவுறுத்தினார். தொடர்ந்து அவர் பேசுகையில், “01.07.2026 முதல் 23.07.2026 வரை திடக்கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்றத் தவறிய பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களுக்குச் சென்னை மாநகராட்சியால் மொத்தம் ரூ.5,10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் தொடரும்” என எச்சரித்தார்.

எனவே, வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்துப் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களும் கழிவுகளைத் தரம் பிரித்து வழங்கி, அபராதத்தைத் தவிர்ப்பதோடு பசுமையான சென்னையை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.