சென்னை ஐஐடி வளாகத்தில் தமிழ்நாடு அமைச்சர் நிர்மல்குமார் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பசுமை எரிசக்தி மற்றும் மின்கல தொழில்நுட்பங்கள் தொடர்பான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி பசுமை எரிசக்தி மாநிலமாக மாற்றும் நோக்கில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
ஐஐடி ஆய்வகங்களில் நேரடி ஆய்வு: சென்னை ஐஐடி வளாகத்திற்கு வருகை தந்த அமைச்சர் நிர்மல்குமார், அங்குள்ள புதுமையான கண்டுபிடிப்பு மையமான (Innovation Hub), தூய்மை எரிசக்தி ஆய்வகம் (Clean Energy Lab), திரவ மின்கல ஆய்வகம் (Flow Battery Lab), மின்கல மறுசுழற்ச்சிக்கான உயிரித்தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் 1 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து, மின்சார சேமிப்பு தொழில்நுட்பங்கள், பேட்டரி மறுசுழற்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பு மற்றும் நவீன மின் கட்டமைப்பு மேலாண்மை குறித்து ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்வின் போது, ஐஐடி பேராசிரியர்கள் சத்ய நாராயணன் சேஷாத்திரி, நிதின் முரளிதரன் மற்றும் மரபு சாரா எரிசக்தி தலைமைப் பொறியாளர் பி.ஜி. கலைவாணி ஆகியோர் உடனிருந்தனர்.
அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்: ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், தமிழ்நாட்டின் எரிசக்தி துறைக்கான பல புதிய முன்னெடுப்புகளை அறிவித்தார்:
-
புதிய பேட்டரி கொள்கை: உலகத்தரத்திலான பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) மற்றும் பேட்டரி மறுசுழற்சி தொடர்பான விரிவான புதிய கொள்கை, சென்னை ஐஐடி நிபுணர்களின் உதவியோடு விரைவில் வெளியிடப்படும்.
-
வெளிப்படையான அனுமதி நடைமுறை: மின்கட்டமைப்பின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, Load Flow ஆய்வின் அடிப்படையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு வெளிப்படையான மற்றும் அறிவியல் பூர்வமான அனுமதி வழங்கப்பட உள்ளது.
-
நிலுவைப் விண்ணப்பங்கள் பரிசீலனை: முன்பிருந்த நிலுவையில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்பங்கள் உரிய தொழில்நுட்ப ஆய்வுகளுக்குப் பிறகு விரைவாகப் பரிசீலிக்கப்பட்டு முறையான நடவடிக்கை எடுக்கப்படும்.
-
வீட்டு மாடி சூரியமின் திட்டம்: பொதுமக்களின் பயன்பாட்டை விரைவுபடுத்துவதற்காக, எளிமையான அனுமதி நடைமுறைகள் மற்றும் ஒருங்கிணைந்த செயலி (Integrated App) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் மானியம் பெறுதல், மீட்டர் பொருத்துதல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் விபரங்கள் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் ஒரே தளத்தில் கிடைக்கும்.
-
உச்ச மின் தேவையைச் சமாளிக்க திட்டம்: அதிகரித்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியைத் திறம்பட ஒருங்கிணைத்து, காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் உச்ச மின் தேவையைத் தடையின்றி சமாளிக்க BESS தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றும்.
இந்த அதிரடி முன்னெடுப்புகள் தமிழ்நாட்டில் தடையற்ற மின் விநியோகம், மேம்பட்ட மின் வலையமைப்பு மற்றும் தூய்மையான எரிசக்தி பயன்பாட்டை உறுதி செய்யும் அரசின் உறுதியான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.