தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உட்கட்சி பூசல் மற்றும் பல அணிகளாக செயல்படுவதே முக்கிய முட்டுக்கட்டையாக உள்ளதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில், தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த பயிற்சி முகாமின் நிறைவு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ராகுல் காந்தி, மாவட்டத் தலைவர்களுடன் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்கள், அமைப்பு ரீதியான பலம் மற்றும் வரவிருக்கும் தேர்தல் பணிகள் குறித்து விரிவாகவும் தீவிரமாகவும் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிறைவு விழாவில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றியதாவது:
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வலுவாக வளர்வதற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது உட்கட்சி பூசலும், கட்சிக்குள் பல அணிகளாகப் பிரிந்து செயல்படும் போக்கும்தான். இதனை உடனே மாற்ற வேண்டும். கட்சி நிர்வாகிகளின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் டெல்லியில் இருந்து மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். யார் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பது தலைமைக்கு நன்றாகத் தெரியும்.
கட்சி நிர்வாகிகளை அரவணைத்துச் செல்லாத தலைவர்களுக்கு இனி காங்கிரஸில் எந்த இடமும் கிடையாது. புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டத் தலைவர்கள் அனைவரும் கட்சியின் மேலிட வழிகாட்டுதலின்படியும், கட்டுப்பாட்டின்படியும் மட்டுமே செயல்பட வேண்டும். கட்சிக்கு உண்மையாக, முழு விசுவாசமாகச் செயல்படுபவர்களுக்கு மட்டுமே எதிர்காலத்தில் உரிய வாய்ப்புகளும் முக்கியப் பதவிகளும் வழங்கப்படும். தவறு செய்பவர்களையும், மற்றவர்களை அரவணைக்கத் தவறுபவர்களையும் கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
மேலும், இன்றைய இளைய தலைமுறையினரை அதிக அளவில் கட்சியில் இணைப்பதன் மூலமே காங்கிரஸின் அடுத்த கட்ட வளர்ச்சியை சாத்தியமாக்க முடியும். எனவே, இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்கள் காங்கிரஸின் வளர்ச்சிக்காக தீவிரமாகப் பணியாற்ற களமிறக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தனது உரையில் அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஏராளமான மாவட்டத் தலைவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.