தஞ்சாவூர்:

தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் வைத்து இன்று காலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தவெக மகளிரணி நிர்வாகி அளித்த புகாரின் பேரில் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லும் வழியில் பெரும் பரபரப்பான சூழல் அரங்கேறியுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்ட உதயநிதியுடன் காவல்துறையினர் தஞ்சை நோக்கிப் புறப்பட்டனர். மதிய வேளையில் விழுப்புரம் அருகே உள்ள ஒலப்பூர் காவல் நிலையத்தில் அவர் உணவு உட்கொண்டார். தொடர்ந்து பிற்பகல் 4 மணியளவில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியைக் கடந்த வாகனங்கள் திருச்சி வழியாகத் தஞ்சை நோக்கிச் சென்றன. இதற்கிடையில், தஞ்சை காவல் நிலையப் பகுதிகளில் திமுகவினர் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதாலும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கத்துடனும் காவல்துறையினர் திட்டத்தில் மாற்றம் செய்தனர்.

சென்னையிலிருந்து சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக வேனில் பயணம் செய்த உதயநிதியை, திருச்சி வழியாகத் தஞ்சை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது திடீரென யூடர்ன் செய்து கந்தர்வகோட்டை அருகே உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குப் போலீசார் அழைத்துச் சென்றனர். ஆனால், வழக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள தஞ்சை கிழக்கு அல்லது தெற்கு காவல் நிலையத்திற்குத்தான் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கக் கூடாது என்றும் கூறி உதயநிதி ஸ்டாலின் போலீஸ் வாகனத்தை விட்டு இறங்க மறுப்புத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஐஜி பாலகிருஷ்ணன் மற்றும் தஞ்சை எஸ்.பி. சுந்தரவதனம் ஆகியோர் உதயநிதி ஸ்டாலினுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். நீதிமன்ற உத்தரவையும், உயர் அதிகாரிகளின் விளக்கத்தையும் ஏற்றுக் கொண்டதையடுத்து, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உதயநிதி சம்மதித்தார். பின்னர், மாலை 6:45 மணி முதல் தஞ்சை எஸ்.பி. சுந்தரவதனம் முன்னிலையில் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான காவல்துறையினர் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

இதனிடையே, செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு உதயநிதி அழைத்து வரப்பட்டதை அறிந்த திமுக தொண்டர்கள் அங்கு குவிந்ததால் போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், தஞ்சை நகர காவல் நிலையம் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவி வருகிறது. சென்னை உயர் நீதிமன்றம் இன்று இரவுக்குள் விசாரணையை முடித்துவிட்டு உதயநிதியை விடுதலை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், காவல் நிலையப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.