திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில், தனது மகளை டியூஷன் சென்டரில் இருந்து அழைத்துச் செல்ல வந்த திருமண மண்டப உரிமையாளர், மகள் கண்முன்னே 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (52) என்பவர் அங்கு திருமண மண்டபம் நடத்தி வந்தார். அவர் மனைவி சாந்தி மற்றும் 10ஆம் வகுப்பு படிக்கும் மகளுடன் கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோவில் சன்னதி தெரு பகுதியில் வசித்து வந்தார்.

நேற்று இரவு தனது மகளை டியூஷன் சென்டரில் இருந்து அழைத்து வர கண்ணன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். டியூஷன் சென்டர் வாசலில் மகளை அழைத்தபோது, அங்கு மறைந்திருந்ததாக கூறப்படும் 4 பேர் கொண்ட கும்பல் திடீரென அவரை சுற்றிவளைத்துள்ளது.

பின்னர் அந்த கும்பல் அரிவாளால் கண்ணனை சரமாரியாக வெட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பலத்த வெட்டுக்காயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்தை தனது கண்முன்னே கொல்லப்பட்டதை பார்த்த அவரது மகள் அதிர்ச்சியில் அலறியதாக செய்தி தெரிவிக்கிறது.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

தகவலறிந்த திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி மற்றும் கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கண்ணனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் சம்பவ இடம் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள CCTV பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

10 மணி நேரத்தில் 2 பேர் கைது

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு நான்கு பேரைக் கொண்ட கும்பலை போலீசார் தேடி வந்த நிலையில், வெங்கடேஷ் மற்றும் சூர்யா இசக்கி ஆகிய இருவரை 10 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீதமுள்ளவர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் நடத்தி வருகின்றனர்.

கொலைக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவில்லை. முன்விரோதம், இடப்பிரச்சினை, சொத்து தகராறு அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத்தினரிடம் விசாரணை, CCTV footage, சந்தேக நபர்களின் தொடர்புகள் உள்ளிட்ட ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு கொலைக்கான பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.