காரைக்கால் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பரபரப்பு; மீனவர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் எதிர்ப்பு பதிவு

காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் செயல்பட்டு வரும் துறைமுகத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக நடைபெற்ற பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில், திட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் கூட்ட அரங்கில் பரபரப்பான சூழல் நிலவியது.

போலகம் கிராமத்தில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காரைக்கால், பட்டணம்சேரி, டி.ஆர்.பட்டினம், வாஞ்சூர், நாகூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மீனவர்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

துறைமுகத்தின் பரப்பளவை தற்போதைய சுமார் 650 ஏக்கரில் இருந்து 3,000 ஏக்கராக அதிகரிப்பது, துறைமுக ஆழத்தை 48 அடியில் இருந்து 60 அடியாக உயர்த்துவது மற்றும் ஆண்டுக்கு 21.5 மில்லியன் டன்னாக உள்ள சரக்கு கையாளும் திறனை 100 மில்லியன் டன்னாக அதிகரிப்பது உள்ளிட்ட விரிவாக்க முன்மொழிவுகள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளைப் பதிவு செய்வதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் துறைமுக நிறுவனத்தின் தரப்பில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை எனக் கூறி சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி பேசத் தொடங்கியபோதும், விரிவாக்கத் திட்ட அறிக்கையை வாசிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களில் ஒரு பகுதியினர் கோஷங்களை எழுப்பினர்.

ஒரு கட்டத்தில் தடுப்புகளைத் தாண்டி கூட்ட அரங்கின் முன்பகுதிக்குச் செல்ல சிலர் முயன்றதாகக் கூறப்பட்ட நிலையில், காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. கருத்துக் கேட்பு வெளிப்படையாகவும் நியாயமாகவும் நடைபெற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

கூட்டத்தில் பேசிய இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் எஸ். ஆனந்த்குமார், துறைமுகத்தின் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகவும் அவர் குற்றச்சாட்டு எழுப்பினார். மேலும், விரிவாக்கத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் நம்பகத்தன்மை மற்றும் சட்டப்பூர்வத்தன்மை குறித்தும் அவர் கேள்விகளை எழுப்பினார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான துறைமுக நிர்வாகத்தின் பதில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் இல்லை.

சமூகச் செயல்பாட்டாளர் காளியம்மாள் பேசுகையில், துறைமுக விரிவாக்கம் கடல்சார் சூழல், மீன்வளம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து கவலை தெரிவித்தார். திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

திட்டத்திற்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறப்பட்ட ஒரு பெண்ணின் கருத்துக்கு கூட்டத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. அவரது கருத்தின் பின்னணியை விசாரிக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்தனர்.

கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் டி.ஆர்.பட்டினம் மற்றும் போலகம் உள்ளிட்ட சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு தரப்பினரும் துறைமுக விரிவாக்கம் காரணமாக சுற்றுச்சூழல், கடலோரப் பகுதிகள் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து கேள்விகளை எழுப்பினர். இதனால் காரைக்கால் துறைமுக விரிவாக்க விவகாரம் மீண்டும் பொதுமக்களின் தீவிர கவனத்தை ஈர்த்துள்ளது.