தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் குடியிருப்பு வீதிகளில் மழைநீர் புகைந்துள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது. எனவே, மழைநீரில் வெறும் காலுடன் நடப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், சாலைகளில் தேங்கியுள்ள நீர் காரணமாக எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) மற்றும் மிலியாய்டோசிஸ் போன்ற நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. மழைநீரில் வெறும் கால்களுடன் நடப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
எலிக்காய்ச்சல் குறித்து:
லெப்டோஸ்பைரா எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் இந்த நோய் முதலில் விலங்குகளில் பரவி, பின்னர் மனிதர்களுக்கும் தொற்றுகிறது. குறிப்பாக நாய்கள், பன்றிகள், கால்நடைகள் மற்றும் எலிகளின் சிறுநீர் மழைநீரில் கலந்து இருந்தால், அதில் கால்வைத்தாலே தொற்று உடலில் நுழைய வாய்ப்புள்ளது. இந்த நோய் சிறுநீரகம் மற்றும் நுரையீரலை முக்கியமாக பாதிக்கக்கூடியது. உலகளவில் ஆண்டுதோறும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். எனவே மழைநீரில் செல்லும் போது காலில் செருப்பு அணிவது மிகவும் முக்கியம்.
மிலியாய்டோசிஸ் குறித்து:
மண்ணில் வாழும் பர்கோல்டெரியா ஸ்யூடோமேய் என்ற நுண்ணுயிரால் இந்த நோய் ஏற்படுகிறது. காயங்களுடன் மாசான நீரில் நடந்தால் அல்லது தரமற்ற நீரை அருந்தினால் இந்த தொற்று ஊடுருவ முடியும். சில நேரங்களில் காற்றில் மிதக்கும் கிருமிகள் மூச்சு வழியாக உடலில் நுழைந்தாலும் நோய் தொடங்க வாய்ப்புள்ளது.
சாதாரணமாக 2 வாரங்களுக்குப் பிறகு காய்ச்சல், தலைவலி, குளிர்நடுக்கம், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றும். சரியான சிகிச்சை பெறாமல் இருந்தால் இந்த நோய் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், எலும்புகள் மற்றும் மூளை போன்ற முக்கிய உறுப்புகளைப் பாதிக்கக்கூடும்.