ஆஷஸ் டெஸ்டில் சதமடித்த ஜோ ரூட்; ஹெய்டனின் சவாலை நிறைவேற்றினார்
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 முன்னிலையில் உள்ளது.
இதன்பின், ஆஸ்திரேலியா–இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்குப் பிறகு 325 ரன்கள் குவித்துள்ளது. ரூட் 135 ரன்களுடனும், ஆர்ச்சர் 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நாளை 2வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆட்டத்தில் ஜோ ரூட் அடித்த சதம் அவரது 40வது டெஸ்ட் சதமாக பதிவானது. இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அவர் அடித்த முதல் டெஸ்ட் சதமாக இது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு 15 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் சதமடிக்க முடியாமல் தடுமாறியுள்ளார்; அதில் 9 அரைசதங்கள் அடித்தாலும் ஒரு முழு சதமும் அடிக்கவில்லை. இந்த தொடரில் அவரின் நீண்ட கால ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆஷஸ் தொடருக்கு முன்பு, ஜோ ரூட் சதம் அடிக்காவிட்டால், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக ஓடி வருவேன் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், ஜோ ரூட் இந்த போட்டியில் சதம் அடித்து ஹெய்டனின் சவாலை நிறைவேற்றியுள்ளார்.