வாஷிங்டன்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ஜோடிமெட்லா பகுதியைச் சேர்ந்த சஹாஜா உடுமலா (24), அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் அல்பெனி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பில் பயின்று வந்தார். அவர் வெஸ்ட் அவன்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சக மாணவிகளுடன் வாடகைக்கு தங்கி வந்தார்.
சமீபத்தில் அந்த வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சஹாஜா உட்பட பலர் சிக்கினர். மீட்புக்குழுவினர் விரைந்து சென்று அவர்களை மீட்டனர். இதில் சஹாஜா கடுமையாக காயமடைந்தார்; மற்ற மாணவிகள் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.
சஹாஜா அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், 90 சதவீத தீக்காயங்களால் அவர் உயிரிழந்தார். அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.