ஈரோட்டில் விஜயின் சுற்றுப்பயணம் – தவெக ஒருங்கிணைப்பாளர் தகவல்

கரூர் சம்பவத்திற்குப் பிறகு, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற உள்ளரங்கு கூட்டத்தில் மட்டுமே விஜய் பங்கேற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து, தவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: “எதிர்கால தமிழகம், இளைஞர்களின் எழுச்சி நாயகன் விஜய். மக்கள் எழுச்சியோடு எதிர்காலத்தை உருவாக்க இருக்கிறார். வரும் டிசம்பர் 16-ஆம் தேதி விஜய் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வாரி மஹால் அருகே உள்ள தனியார் இடம் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் தேவையான கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அனுமதி கிடைத்தவுடன் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.

இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளோம். ரோடு ஷோ நடத்தப்படாது; தனியார் இடத்தில் மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும். மக்கள் சக்தியே விஜயை அரியணையில் அமர்த்தும். மூத்த தலைவர் என்பதால், வேறு எந்தக் கட்சி குறித்து பேசுவது தவிர்க்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.