அமைச்சர் முத்துசாமி பேட்டி – காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறுதல் குறித்து விளக்கம்

ஈரோடு: வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோட்டில் நிருபர்களிடம் பேசியபோது கூறியதாவது:

  • சோலார் புதிய பஸ் நிலையத்தில் கழிப்பறை, குடிநீர், மின் விளக்குகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு கட்டப்பட்ட கடைகள் ஏலம் விடப்பட்டுள்ளன. ஏலம் பெற்றவர்கள் கடைகள் அமைக்க சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. பயணிகள் அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

  • காலி மதுபாட்டில்களை வெளியே போடுவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. நீலகிரியில் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டதால், காலி பாட்டில்களை திரும்ப பெற வேண்டும் எனக் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கோர்ட்டு வழங்கிய கால அவகாசத்திற்குள் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

  • காலி பாட்டில்களை திரும்ப பெறுவதால் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கூடுதல் பணி சுமை இருப்பதை ஒப்புக்கொள்கிறோம். அதை குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதுவரை, டாஸ்மாக் பணியாளர்கள் கண்டிப்பாக காலி பாட்டில்களை திரும்ப பெற வேண்டும். இதற்காக தொழிற்சங்கங்களும் பணியாளர்களும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளன.

  • பாட்டில்களை வைப்பதற்கு இடம் பற்றாக்குறை இருப்பதால், ஒவ்வொரு நாளும் இரண்டு முறை பாட்டில்கள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலி பாட்டில்கள் திரும்ப பெறும் விவகாரத்தில், டாஸ்மாக் துறையும் பணியாளர்களும் இணைந்து கோர்ட்டு உத்தரவை முறையாக செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.