சென்னை: மாங்காடு அருகே வண்டலூர்–மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் இளைஞர்கள் சிலர் செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்தபடி இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரைச் சேர்ந்த சசி மற்றும் தனுஷ் ஆகிய இருவர், விலை உயர்ந்த ஹெல்மெட் வாங்குவதற்காக இன்று மாலை பைக்கில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்தனர். மலையம்பாக்கம் அருகே சென்றபோது, தங்கள் செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்து கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற பைக்குடன் மோதியதில், மூவரும் கீழே விழுந்தனர்.
அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உதவிக்காக வந்தபோது, மற்றொரு பைக் இவர்களை மோதியது. இதனால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி, மொத்தம் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ரீல்ஸ் வீடியோ எடுத்தபடி வாகனம் ஓட்டிய இருவருக்கு லேசான காயங்களும், மற்ற மூவருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளன. அவர்கள் மேல்சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.