புதுடெல்லி: தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
அந்த ஜாமீனின் நிபந்தனையாக, வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் சென்னை அமலாக்கத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த நிபந்தனையை தளர்த்த கோரி செந்தில் பாலாஜி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தளர்வுகளை வழங்கியுள்ளது. இதன்படி, வாரம் இருமுறை ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை; தேவைப்பட்டால் மட்டுமே விசாரணைக்காக நேரில் அழைக்கலாம் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், விசாரணைக்காக அழைக்கப்படும் போது அதிலிருந்து விலக்கு தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. செந்தில் பாலாஜி விசாரணைக்கு இடையூறு செய்தால், கோர்ட்டை நாடலாம் என உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.