‘துரந்தர்’ படத்தில் வில்லன் அக்ஷய் கண்ணாவுக்கு ரசிகர்கள் தரும் வரவேற்பு நாயகனை விட அதிகம்
ஆதித்யா தார் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான ‘துரந்தர்’ திரைப்படம், வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘தெய்வ திருமகள்’ படத்தில் விக்ரமின் மகளாக நடித்துச் சிறுவயதிலேயே கவனம் ஈர்த்த சாரா அர்ஜுன், இப்போது ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்துள்ளார். மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த படத்திற்கு சாஸ்வத் சச்தேவ் இசையமைத்துள்ளார். படத்தில் ரன்வீர் சிங் இந்திய உளவாளியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரும் சாரா, அங்குள்ள ஒரு முக்கிய அரசியல் கட்சித் தலைவரின் வாரிசாக கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள அக்ஷய் கன்னா தான் தற்போது ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுவருகிறார். குறிப்பாக, அவருக்காக உருவாக்கப்பட்ட தீம் மியூசிக், அதனுடன் இணைந்த நடன அசைவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, படத்தின் மீது கூடுதல் கவனம் திரும்பியுள்ளது.
இதே நேரத்தில், ‘துரந்தர்’ படத்தைச் சுற்றி சர்ச்சைகளும் எழுந்துள்ளன. இந்து–முஸ்லிம் பிரச்சனையை தூண்டுவதாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டி, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட ஆறு அரபு நாடுகள் இந்த படத்தை தங்களது நாட்டில் வெளியிட தடை விதித்துள்ளன. இந்த தடை காரணமாக படத்தைச் சுற்றி சர்வதேச அளவில் விவாதங்கள் எழுந்தாலும், இந்தியா மற்றும் பிற நாடுகளில் ரசிகர்கள் ஆதரவு குறையவில்லை.
இந்த சர்ச்சைகளின் நடுவிலும், ‘துரந்தர்’ பாக்ஸ் ஆபிஸில் அதிரடி காட்டி வருகிறது. வெளியான 10 நாட்களிலேயே உலகளவில் ரூ.552.70 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த வசூல் சாதனையில், அக்ஷய் கன்னாவின் கதாபாத்திரம் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. அவரின் நடன ரீல்ஸ் இன்ஸ்டாகிராமில் பெரும் வரவேற்பைப் பெற்றதால், படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் அதிகரித்ததாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரன்வீர் சிங் நாயகனாக நடித்திருந்தாலும், இந்த படத்தில் வில்லனாக வந்த அக்ஷய் கன்னா தான் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக கவர்ந்துள்ளார். அவரது திரைநிகழ்திறன், ஸ்டைல், தீம் மியூசிக் ஆகியவை ‘துரந்தர்’ படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக மாறியுள்ளன.