அஜிதா ஆக்னஸ் போராட்டம் – தற்கொலை முயற்சியால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகி அஜிதா ஆக்னஸ், மாவட்ட செயலாளர் பதவி கிடைக்குமென எதிர்பார்த்திருந்தார். ஆனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாததால், அவர் கடும் ஏமாற்றத்தில் ஆழ்ந்தார். இதனைத் தொடர்ந்து, 23-ம் தேதி சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அன்று புதிய நிர்வாகிகளை சந்தித்து நியமன ஆணையை வழங்க நடிகர் விஜய் காரில் அலுவலகத்துக்கு வந்தபோது, அஜிதா ஆக்னஸ் தனது ஆதரவாளர்களுடன் காரை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பவுன்சர்கள் அவர்களை விலக்கினர். பின்னர் விஜய்யின் கார் அலுவலகத்துக்குள் சென்றது. இந்தச் சம்பவம் அங்கு பதற்றமான சூழலை ஏற்படுத்தியது.
புதிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் முடிவடைந்தபின், த.வெ.க. இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் வெளியே வந்து அஜிதா ஆக்னஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமாதானம் ஏற்படாததால், அவர் தனது ஆதரவாளர்களுடன் அலுவலக நுழைவுவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதற்கிடையில், தூத்துக்குடி மத்திய மாவட்டத்துக்கான புதிய நிர்வாகிகள் பட்டியல் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டது. இதனால் அஜிதா ஆக்னஸ் தனது போராட்டத்தை கைவிட்டு, தலைமை மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், கடைசி வரை விஜய்யுடன் இணைந்து செயல்படுவோம் எனவும் தெரிவித்தார்.
ஆனால், சமூக வலைத்தளங்களில் சில த.வெ.க. தொண்டர்கள் அவரை திமுகவின் கைகூலிகள் என விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் ஆழ்ந்ததாகவும், அதிர்ச்சியில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக குடும்பத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் த.வெ.க. தொண்டர்கள் மட்டுமல்லாமல், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜிதா ஆக்னஸின் போராட்டம், காரை மறித்த சம்பவம், பின்னர் தற்கொலை முயற்சி என தொடர்ச்சியாக நடந்த நிகழ்வுகள், தேர்தலை முன்னிட்டு த.வெ.க. கட்சியின் உள்நிலை அரசியலை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.