சென்னை:

தமிழகத்தில் நடைபெறவுள்ள 17-வது சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருக்கிறது. தேர்தல் தேதிகள் மார்ச் மாத தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, தனது கூட்டணியை உறுதிசெய்யும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக (டாக்டர் அன்புமணி அணி), தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தேமுதிக மற்றும் புதிய தமிழகம் கட்சிகளுடன் பாஜக தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

வரும் பிப்ரவரி 24ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் வருவதையொட்டி, அதிமுக தலைமையகம் தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் விரைவுபடுத்தியுள்ளது. அதற்கு முன்னதாகவே கூட்டணியை இறுதி செய்து, தொகுதி பங்கீட்டை முடிக்க கட்சித் தலைமையகம் திட்டமிட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, ஜெயலலிதா பிறந்தநாளன்று கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டையும், அதிமுக வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியலையும் வெளியிட்டு அதிரடி காட்ட உள்ளார்.

ஏற்கனவே அதிமுகவின் தேர்தல் அறிக்கை 2 கட்டங்களாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் “மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும், ஆண்களுக்கும் அரசு பேருந்துகளில் இலவச பயணம் வழங்கப்படும், ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்” போன்ற 10 முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

அடுத்த கட்டமாக, ஜெயலலிதா பிறந்த நாளன்று 15 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெறும் வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த முறை தேர்தல் களத்தில் நான்கு முக்கிய அணிகள் மோதவுள்ளன. ஆளுங்கட்சியான திமுக கூட்டணியை இன்னும் இறுதி செய்யாத நிலையில், நாம் தமிழர் கட்சி வரும் 21ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் 234 வேட்பாளர்களை ஒரே நேரத்தில் அறிவிக்கவுள்ளது.

இந்நிலையில், அதிமுக தனது தேர்தல் பிரசார வேகத்தை அதிகரித்துள்ளது. தேர்தல் அறிக்கையுடன் சேர்ந்து முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிடுவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக கூட்டணியில் அதிமுக 170 தொகுதிகளிலும், பாஜக 25, பாமக 23, தமாகா 6 மற்றும் பிற சிறிய கட்சிகள் 1 முதல் 2 தொகுதிகளிலும் போட்டியிடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.