சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் நியமனங்களை தாமதப்படுத்தி வருவதாகவும், இது கல்வி துறையையே பாதிக்கும் ஒரு பெரிய அலட்சியம் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
கடந்த ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி மாநிலம் முழுவதும் உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான போட்டித் தேர்வு நடைபெற்றது. ஆனால், அதன் முடிவுகள் இன்று வரை வெளியிடப்படவில்லை. இதனால் 13 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட நியமனங்கள் ரத்து செய்யப்படலாம் என்ற செய்திகள், தேர்வில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு கல்லூரிகளுக்கான நியமன அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக வெளியிடப்பட்டது. அதன்பின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தேர்வு நடைபெற்றது. தேர்வுக்குப் பிறகு, உத்தேச விடைக்குறிப்பு ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. வழக்கமாக ஒரு வாரத்திற்குள் முடிவுகள் வெளியாக வேண்டும். ஆனால், ஒரு மாதத்திற்கும் மேலாகியும் முடிவுகள் வெளியாகவில்லை என்பது கவலைக்குரியது.

இதற்கான காரணம் குறித்து வெளிவரும் தகவல்களின் படி, அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால், தேர்வு முடிவுகளை வெளியிட்டால் புதிய நியமனங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியிருக்கும்; அதற்கான நிதி அரசு வசம் இல்லாத நிலைமை நிலவுகிறது என கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், அரசு தன் நிர்வாக திறனை இழந்துவிட்டதாகும் என அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மூன்று மாத மகளிர் உரிமைத் தொகை, சிறப்புத் தொகை ஆகியவற்றுக்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்க முடிந்த திமுக அரசு, உதவிப் பேராசிரியர்களின் நியமனத்துக்கான ஊதியத்துக்கே பணம் இல்லை என கூறுவது மிகப் பெரிய சமூக அநீதியாகும் என்றும் அவர் கூறினார்.

தற்போது மாநில அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 11,000-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உள்ளன. இதில் 9,000-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகவே உள்ளன. அந்த இடங்களை நிரப்பாமல் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களை நியமித்து வருவதை அன்புமணி கடுமையாக விமர்சித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, “2021-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக 35 புதிய கலைக் கல்லூரிகளை திறந்தது. ஆனால், அவற்றில் ஒரு உதவிப் பேராசிரியரைக் கூட நியமிக்கவில்லை. இதனால் கல்வித் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த தாமதம், தேர்வில் பங்கேற்ற இளைஞர்களின் எதிர்காலத்தையும் கனவுகளையும் சிதைக்கும் நிலையை ஏற்படுத்தும்,” என்றார்.

அதனால், தேர்வில் பங்கேற்றவர்களின் நம்பிக்கையை காக்கும் வகையில் 2,708 உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட்டு, தகுதியானவர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.