சென்னை:
தமிழகத்தில் நடைபெறவுள்ள 17வது சட்டசபை தேர்தல் அரசியல் சூழ்நிலையை தீவிரமாக்கி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்த தேர்தலில் நான்கு முனைப்போட்டி நிலவ வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, தனித்து போட்டியிடும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, மற்றும் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் — இவை நான்கும் தேர்தல் களத்தில் முக்கிய போட்டியாளர்களாக உருவெடுத்துள்ளன.
இந்நிலையில், பாஜக கட்சியின் உள்நாட்டு அமைப்பில் முக்கிய மாற்றம் ஒன்றை கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
அண்ணாமலை கடந்த சில ஆண்டுகளாக தமிழக பாஜக மாநிலத் தலைவராக செயல்பட்டவர். அவரது தலைமையில் பாஜக மாநிலம் முழுவதும் வேரூன்றி வளர்ச்சி பெற்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் தீர்மானத்தை கட்சி எடுத்ததைத் தொடர்ந்து, அவர் தனது தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார். இதையடுத்து, நயினார் நாகேந்திரன் புதிய மாநிலத் தலைவராக பொறுப்பேற்றார்.
அண்ணாமலை விலகிய பிறகும், அவருக்கு கட்சிக்குள் மிகுந்த ஆதரவு தொடர்கிறது. அவரை ஆதரிக்கும் நிர்வாகிகள், “அண்ணாமலைக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்தநிலையில், தற்போது அண்ணாமலைக்கு பாஜகவில் புதிய முக்கியப் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, அவர் தமிழக பாஜக சக்தி கேந்திரா தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளியாகும் நேரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிப்ரவரி 14-ம் தேதி சேலம் வருகை தரவுள்ளார். இதன் பின்னணியில், அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
சக்தி கேந்திரா என்ன?
பாஜகவின் சக்தி கேந்திரா அமைப்பு தேர்தல் பணிகளில் மிக முக்கியமானது. ஒவ்வொரு மூன்று வாக்குச்சாவடிகளுக்கும் ஒரு சக்தி கேந்திரா பொறுப்பாளர் நியமிக்கப்படுவார். இவர்களின் பணி, தங்கள் கீழ் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் தொண்டர்களை ஒருங்கிணைத்து, மக்களை அதிகளவில் வாக்களிக்க வைப்பது மற்றும் கட்சியின் பிரசார நடவடிக்கைகளை பலப்படுத்துவது ஆகும்.
தமிழக முழுவதும் சுமார் 25,000 சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் உள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து ஆலோசனை வழங்கும் பொறுப்பு மாநில சக்தி கேந்திரா தலைவருக்கே உரியது.
அண்ணாமலைக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டால், அவர் சக்தி கேந்திரா பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். இதன் மூலம், தேர்தல் பிரசாரத் திட்டங்கள், வாக்குச்சாவடி வலுப்படுத்தல், மற்றும் வாக்காளர் இயக்க நடவடிக்கைகள் அனைத்திலும் அவர் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமித்ஷாவின் சேலம் வருகையுடன் இணைந்து இந்த நியமனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால், அண்ணாமலை மீண்டும் பாஜகவின் தேர்தல் முன்கூட்டிய திட்டமிடல் அணியில் முக்கியமான நிலையை பிடிக்கலாம் எனக் கட்சி வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.