திருச்சி: மணப்பாறை தொகுதியில் போட்டியிடும் ம.ம.க. வேட்பாளர் அப்துல் சமத்துக்கு தொடர்ந்து கிளம்பி வரும் எதிர்ப்பை சமாளிக்க, மாவட்ட அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஸ் ஆகியோர் நேரடியாக களம் இறங்கியுள்ளனர். மணப்பாறை தொகுதி தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கப்படுவதால், உள்ளூர் திமுகவினரிடையே அதிருப்பம் உருவாகியுள்ளது. இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ அப்துல் சமத் மீண்டும் போட்டியிடுகிறார்.

அவர் வாக்குக் கேட்டுச் செல்லும் இடங்களில், “இதுவரை எங்கள் பகுதிக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை” எனக் கூறி மக்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் உள்ளூர் திமுகவினர் பிரச்சாரத்தில் சுணக்கம் காட்டுவதாகவும், சிலர் மக்களை போராட்டம் நடத்த தூண்டுவதாகவும் அப்துல் சமத் அமைச்சர்களிடம் முறையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து கடந்த 14‑ஆம் தேதி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நேற்று அமைச்சர் கே.என்.நேரு மணப்பாறை தொகுதியில் பிரச்சாரம் நடத்தினர். வேட்பாளருக்கு திமுக நிர்வாகிகள் அளிக்கும் ஒத்துழைப்பை மேம்படுத்தக் கேட்டுக்கொண்டனர்.
பிரச்சாரத்தில் அமைச்சர் நேரு, “கடந்த முறை போல் இந்த முறையும் ஏகோபித்து அப்துல் சமத்தை வெற்றி பெற வைப்போம்” என்றார். மாவட்ட அவைத்தலைவர் பண்ணப்பட்டி கோவிந்தராஜன், ஒன்றியச் செயலாளர் ராமசாமி, முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் பாலசுப்பிரமணி ஆகியோருக்கு இம்முறை வாய்ப்பு இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கும் என்று உள்ளூர் திமுகவினரை சமாதானம் செய்தார்.
திமுகவினர் கூறுகையில், “அப்துல் சமத் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வந்தாலும், அவரது ஆதரவாளர்கள் முற்றிலும் எதிர்த்து நின்றார்கள். புத்தாநத்தம் ஊராட்சியை பிரித்த விவகாரத்தில் அவரது ஆதரவாளர்கள் தலையிட்டதால் அந்தப் பகுதியினருக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது. இதுவே மக்கள் போராட்டமாக வெடித்தது” என்றனர். ஆனால் அமைச்சர்கள் நேரு, மகேஸ் ஆகியோர் அவருக்கு வெற்றி வேண்டும் என கட்டளையிட்டுள்ளதால், இப்போது அனைவரும் ஒன்றுபட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றனர்.
தமுமுக ஐ.டி பிரிவு மாநிலச் செயலாளர் அல்தாஃப், “ஆரம்பத்தில் சில திமுக நிர்வாகிகள் ஒத்துழைப்பு தரவில்லை. அமைச்சர்கள் நேரு, மகேஸ் ஆகியோர் சமாதானம் செய்ததால், இப்போது திமுகவினர் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்கள்” என்றார்.