முதல்வர் மு.க.ஸ்டாலின், என்னையும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் மோசமாக விமர்சித்து வருவதாக பா.ம.க தலைவர் அன்புமணி குற்றம் சாட்டினார். “அவ்வாறு பேசினால் முதல்வரும், உதயநிதியும் தாங்க மாட்டார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து காரிமங்கலத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அன்புமணி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின், என்னையும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் மோசமாக விமர்சித்து வருகிறார். அதற்கு பதிலாக நாங்களும் பேசத் தெரியும். அவ்வாறு பேசினால் முதல்வர் மற்றும் துணை முதல்வர் உதயநிதிக்கு தாங்க முடியாது என்றார் அன்புமணி.
“அப்படிப்பட்ட கடுமையான பேச்சை மக்கள் கவனத்தை திசைதிருப்ப பயன்படுத்தவும் விரும்பவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார். திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் சொல்லி வாக்கு சேகரிப்பு மேற்கொள்வதாகவும், 5 ஆண்டு கால ஆட்சியில் செய்த சாதனைகளைச் சொல்லாமல், ரூ.8,000 போலி கூப்பனை வைத்து வாக்கு கேட்பது ‘வெட்கக்கேடு’ என்றும் அவர் கூறினார்.
“கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் நரக ஆட்சியை தொடர்ந்து வருகிறார்கள்” என அவர் விமர்சித்தார். சிறு குழந்தைகள் உள்ளிட்டோருக்கு எதிராக கொடூரமான குற்றங்கள் நடப்பதாகவும், இதை மாற்றியமைக்க தமிழ்நாட்டு முதல்வராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவது அவசியம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
“இன்னும் ஒரு மாதத்தில் அவரது அமைச்சரவையில் அமைச்சராக பதவி ஏற்கும் கே.பி.அன்பழகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்” எனவும் தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக அணியை டெபாசிட் இழக்கும் நிலைக்கு தள்ள வேண்டும் என்றும் அன்புமணி மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். “தருமபுரி மாவட்டத்தை திமுக அரசு துரோகம் செய்துள்ளது” என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.