புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை தொகுதி எண்ணிக்கையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவது இது முதல் முறையல்ல. சுதந்திரத்துக்குப் பிறகு எம்.பி.க்களின் எண்ணிக்கை ஐந்து முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1951 அக்டோபர் 25 முதல் 1952 பிப்ரவரி 21 வரை நடைபெற்றது. அப்போது 489 மக்களவை இடங்களுக்காக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆரம்ப கால ஏற்பாடுகளின் அடிப்படையில் இந்த தொகுதிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டது.

அடுத்து 1957‑ல் நடைபெற்ற இரண்டாம் பொதுத் தேர்தலில் எம்.பி.க்களின் எண்ணிக்கை 494 ஆக உயர்ந்தது. அதற்குப் பிறகு 1967‑ல் நடந்த நான்காம் பொதுத் தேர்தலின் போது தொகுதிகளின் எண்ணிக்கை 520 ஆக அதிகரிக்கப்பட்டது. ஆனால் 1971 தேர்தலில் 518 எனக் குறைக்கப்பட்டது. அதன்பின் 1977‑ல் இந்த எண்ணிக்கை 542 ஆக உயர்ந்தது. 1980‑ல் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 என உயர்த்தப்பட்டது. அதன்பின் இன்று வரை அந்த எண்ணிக்கை மாறாமல் நீடித்து வருகிறது.

குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை ஊக்குவிக்கவும், பல்வேறு மாநிலங்களுக்கு இடையே சமநிலை பேணவும் என்று 1976‑ல் தொகுதி மறுவரையறை செய்வது நிறுத்தப்பட்டது. மக்கள்தொகை பெருகினாலும் ‘உறை நிலை’ (freeze) என்ற பெயரில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்காது என அப்போது முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் இந்த உறை நிலை 2001 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இது 2026‑ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த காலகட்டத்தில் மக்கள்தொகை கணிசமாகப் பெருகினாலும், மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மாறாமல் இருந்துவருகிறது. 1971 மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு நாடாளுமன்ற தொகுதிகளின் எல்லைகள் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டன. ஆனாலும் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படவில்லை.

தற்போது 2026‑க்குப் பிறகு மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விவாதங்கள் நடைபெறுகின்றன. தொகுதி எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் அது ஆறாவது முறையாக இருக்கும் என்பது வரலாற்று அடிப்படையில் குறிப்பிடப்படுகிறது.