ஈரோடு – கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் அதிமுக சீட் கேட்டு கே.கே.செல்வம் விருப்ப மனு
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள அதிமுகவின் கே.கே.செல்வம், “அதிமுக சீட் வழங்கப்பட்டால் செங்கோட்டையனை எதிர்த்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்” என தெரிவித்துள்ளார். செங்கோட்டையனின் அண்ணன் மகனான அவர், அண்மையில் திமுகவிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் (தவெகவ்) கட்சியில் இணைந்தார். அக்கட்சியில் அவர் மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியையும், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளர் பொறுப்பையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், செங்கோட்டையனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2020 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்திருந்த கே.கே.செல்வம், அங்கு ஈரோடு வடக்கு மாவட்டச் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொறுப்பில் இருந்தார். ஆனால் அண்மையில் அவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டதால், மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருடன் பல ஆதரவாளர்களும் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, இன்று கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அதிமுக அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “1980 ஆம் ஆண்டு என் தாத்தா காங்கிரஸ் சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட செங்கோட்டையன் வெற்றி பெற்றார். இப்போது அதே தொகுதியில் மீண்டும் செங்கோட்டையன் போட்டியிட்டால், அவரை எதிர்த்து நான் நிற்பேன். 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை தோற்கடிப்பேன்” என வலியுறுத்தினார்.
மேலும், தவெகவின் கூட்டம் சினிமா படப்பிடிப்பைப் போலவே நடந்ததாக அவர் விமர்சித்தார். “அந்த கூட்டத்தில் ஹீரோ கதாபாத்திரத்தில் விஜய்யும், தாத்தா கதாபாத்திரத்தில் செங்கோட்டையனும் நடித்தனர். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் அந்த படப்பிடிப்பு முடிவுக்கு வரும். ஈரோட்டில் தவெகவிற்கு ரசிகர்கள் கூட்டம் மட்டுமே உள்ளது. கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிடாத விஜய், ஈரோட்டை தவெகவின் கோட்டையாக மாற்றுவோம் என கூறுவது வேடிக்கையாகவும், நகைப்பாகவும் உள்ளது” என கே.கே.செல்வம் தெரிவித்தார்.