சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணியின் ஒரு பகுதியாக, எழும்பூர் நிலையத்தின் 10 மற்றும் 11ஆம் நடைமேடைகளில் நடைமேம்பால அடித்தளப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், கடற்கரை–செங்கல்பட்டு இடையேயான மின்சார ரெயில் சேவைகள் மீது தற்காலிக மாற்றங்கள் மற்றும் குறைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட அறிவிப்பின் படி, கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை மொத்தம் 44 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சில ரெயில்களின் வழித்தடங்களும் மாற்றப்பட்டுள்ளன.
தற்போது, சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு நோக்கி செல்லும் மின்சார ரெயில்கள் எழும்பூர் நிலையத்தின் 5ஆம் நடைமேடை வழியாகவும், செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் ரெயில்கள் 6ஆம் நடைமேடை வழியாகவும் இயக்கப்படுகின்றன. நடைமேடை மாற்றத்தால் தண்டவாள மாற்றம் மற்றும் சிக்னல் தாமதம் ஏற்படுவதால், இரு மார்க்கங்களிலும் ரெயில்கள் தாமதமாக இயங்குகின்றன.
முன்னதாக இயக்கப்பட்ட 204 மின்சார ரெயில் சேவைகள் 164 ஆக குறைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் குறைத்து 115 சேவைகள் மட்டுமே இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதில், கடற்கரை–செங்கல்பட்டு வழித்தடத்தில் 58 மின்சார ரெயில்கள் மற்றும் செங்கல்பட்டு–கடற்கரை வழித்தடத்தில் 57 மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதேநேரத்தில், பீக் அவர்ஸ் நேரத்திற்கு வெளியே இயங்கும் ஏ.சி. மின்சார ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரத்திற்கு இயங்கிய ரெயில், இனி செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்திற்கு திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இயக்கப்படும்.
திருமால்பூர்–அரக்கோணம் மற்றும் சென்னை கடற்கரை–அரக்கோணம் விரைவு மின்சார ரெயில்கள் தற்போது பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். அதேபோல, செங்கல்பட்டு–சென்னை கடற்கரை இடையேயான சில விரைவு மின்சார ரெயில்கள் (40402, 40404, 40405) பரங்கிமலையில் நின்று செல்லும்.
சில மின்சார ரெயில்கள் எழும்பூர்–பரங்கிமலை, எழும்பூர்–கூடுவாஞ்சேரி மற்றும் எழும்பூர்–செங்கல்பட்டு ஆகிய இடங்களுக்கு இரு மார்க்கமாகவும் இயக்கப்படுகின்றன.
இந்த மாற்றங்கள் ஏப்ரல் 5ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. பயணிகள் தங்களது பயணத்துக்கு முன் ரெயில் அட்டவணைகளை சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.