உக்ருல்:
மணிப்பூர் மாநிலத்தின் உக்ருல் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, 50-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, மாவட்டம் முழுவதும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், நிலைமையை கட்டுப்படுத்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை உக்ருல் மாவட்டத்தில் உள்ள லிட்டன் கிராமப் பகுதியில் நாகா மற்றும் குகி சமூகங்களைச் சேர்ந்த இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில், சகிபுங் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லிங் ஷிம்ரே என்பவர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் அதிகரித்த நிலையில், சட்டம்-ஒழுங்கு நிலைமையை பாதுகாக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் தாஸ், ஞாயிற்றுக்கிழமை முதல் தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் லிட்டன் சரோய்கேங் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 50-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே நேரத்தில், இரு சமூகங்களைச் சேர்ந்த தரப்பினரிடையே துப்பாக்கிச் சூடும் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், அப்பகுதியில் அச்சமும், பரபரப்பும் அதிகரித்துள்ளது.
வன்முறைக்கு அஞ்சி, உக்ருல் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள், அத்தியாவசிய உடைமைகளுடன் அண்டை மாவட்டமான காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பான பகுதிகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிக அளவில் இடம்பெயர்ந்துள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, உக்ருல் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சமூக வலைதளங்களில், லிட்டன் சம்பவத்தைத் தொடர்ந்து கொன்ஷாகுல் கிராம மக்கள் முழுமையாக வீடுகளை விட்டு வெளியேறிவிட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. இதற்கு காவல் துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. “கல்வி நிலையங்கள் திறக்கப்படுவதன் காரணமாக ஒருசிலர் மட்டுமே தற்காலிகமாக வாடகை வீடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் தவறானவை. இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், மாவட்டத்தில் வன்முறையை கட்டுப்படுத்தவும், அமைதியை மீட்டெடுக்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பாதுகாப்புப் படைகள் இணைந்து தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல், நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், ஓராண்டு கால குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பிறகு, முதல்வர் யும்னம் கெம்சந்த் சிங் தலைமையில் புதிய அரசு கடந்த 4-ம் தேதி பதவியேற்றது. ஆனால், புதிய அரசு பொறுப்பேற்ற மறுநாளே மாநிலத்தின் பல பகுதிகளில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக, குகி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரங்கள் பெரும் கவலையை ஏற்படுத்தின.
அந்த வன்முறைகளின் தொடர்ச்சியாக, தற்போது உக்ருல் மாவட்டம் லிட்டன் பஜார் மற்றும் லிட்டன் சரோய்கேங் பகுதிகளில் மீண்டும் மோதல்கள் வெடித்துள்ளன. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உக்ருல் மாவட்டம் முழுவதும் ஐந்து நாட்களுக்கு இணைய சேவையை ரத்து செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அமைதி திரும்பும் வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.