புதுச்சேரி:
புதுச்சேரி அரசின் சார்பில் நடத்தப்படும் 12-வது புதுச்சேரி திரைப்பட விழா, வரும் பிப்ரவரி 12 முதல் 15-ம் தேதி வரை நான்கு வெவ்வேறு இடங்களில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விழா சர்வதேச திரைப்பட விழாவாக விரிவுபடுத்தப்படுவதுடன், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மற்றும் ‘கடல்கன்னி’ திரைப்படங்களுக்கு சிறந்த திரைப்பட விருதுகள் வழங்கப்பட உள்ளன.

புதுச்சேரி அரசு, ஒவ்வொரு ஆண்டும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்படும் ஒரு திரைப்படத்தின் இயக்குநருக்கு ‘நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் விருது’ வழங்கி வருகிறது. புதுச்சேரி ஒரு சர்வதேச திரைப்பட விழாவுக்கு ஏற்ற இடமாக இருப்பதையும், திரைப்படத் துறையுடன் கொண்டுள்ள நீண்டகால தொடர்பையும் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு முதல் விழாவை சர்வதேச அளவிற்கு விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கான லோகோ வெளியீட்டு நிகழ்ச்சி, புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது. முதல்வர் ந. ரங்கசாமி திரைப்பட விழாவின் லோகோவை வெளியிட்டு விழாவைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்எல்ஏ கே.எஸ்.பி. ரமேஷ், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், அரசுச் செயலர் (செய்தி மற்றும் விளம்பரம்) முகமது அஹசன் அபித், கலை மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குநர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒவ்வோர் ஆண்டும் புதுச்சேரியில் சுமார் 75 முதல் 80 திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் திரைக்கலைஞர்களுக்கு புதுச்சேரி விருப்பமான இடமாக விளங்குகிறது என்பதற்கு, இங்கு எடுக்கப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கையே சான்றாக உள்ளது. இதேபோல், புதுச்சேரி இளைஞர்களிடையே திரைப்படத் துறையின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இந்த இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்கும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் உருவாகும் சிறந்த திரைப்படங்களை நேரடியாகக் காணும் வாய்ப்பை வழங்குவதற்கும், திரைப்படத் துறையின் தொழில்நுட்ப கூறுகளை அறிந்து கொள்ளும் பயிற்சி மேடையாகவும் இந்த திரைப்பட விழா அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்பட விழாவின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி, பிப்ரவரி 12-ம் தேதி மாலை கடற்கரைச் சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான ‘சங்கரதாஸ் சுவாமிகள் விருதுகள்’ வழங்கப்பட உள்ளன. 2024-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்பட விருது, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்துக்கும், 2025-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்பட விருது, இயக்குநர் தினேஷ் செல்வராஜ் இயக்கிய ‘கடல்கன்னி’ திரைப்படத்துக்கும் வழங்கப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து, கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் பிப்ரவரி 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் தொடர்ந்து சுமார் 35 பிராந்திய மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. ஒவ்வொரு நாளும் மூன்று அரங்குகளில் தலா மூன்று காட்சிகள் என மொத்தம் ஒன்பது காட்சிகள் திரையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 13-ம் தேதி பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்துடன் இந்த திரையிடல்கள் தொடங்கவுள்ளன. அதனுடன், நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள், புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குநர்கள் குருதத் மற்றும் ரித்விக் கட்டக் ஆகியோரின் புகைப்படக் கண்காட்சிகளும் நடைபெற உள்ளன.
மேலும், பிப்ரவரி 14-ம் தேதி பிற்பகலில் இந்தியாவின் சிறந்த படத்தொகுப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீகர் பிரசாத் நடத்தும் பயிலரங்கமும், பிப்ரவரி 15-ம் தேதி திரைப்பட இயக்குநரும், பிரபல நடிகருமான நாசர் நடத்தும் திரைப் பயிலரங்கமும் நடைபெற உள்ளன.
புதுச்சேரி அலியான்ஸ் பிரான்சிஸ் அரங்கில் பிப்ரவரி 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று நாட்களும் தினமும் இரண்டு சர்வதேச திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதேபோல், குறிஞ்சி நகரில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில், குழந்தைகளுக்கான திரைப்படங்கள் தினமும் மூன்று காட்சிகள் வீதம் திரையிடப்பட உள்ளன.
சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்படும் திரைப்படங்களின் இயக்குநர்களுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். தொடக்க விழா நிகழ்வின் ஒரு பகுதியாக, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இந்த விழாவில் நடிகைகள் ரேவதி, சுனைனா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்பராஜ், பா. ரஞ்சித், தினேஷ் செல்வராஜ், தினேஷ் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆண்டு திரைப்பட விழாவில் மொத்தம் 45 திரைப்படங்கள், 8 மொழிகளில், 6 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளன. இதில் 16 தென்னிந்திய திரைப்படங்களும், 12 தமிழ் திரைப்படங்களும் இடம்பெறுகின்றன. தினமும் 2,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்பட விழாவுக்கான அனுமதி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. திரைப்படங்களைப் பார்வையிட விரும்புபவர்கள் https://pyff.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்பவர்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தற்போது புதுச்சேரி மற்றும் தமிழக மக்களை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இந்த திரைப்பட விழா, எதிர்காலத்தில் இந்தியாவையும் உலகையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெரிய சர்வதேச திரைப்பட விழாவாக வளர்ச்சி அடையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.