சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு ஏற்பட்ட தொடர் மின்வெட்டைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசு மற்றும் மின்சாரத் துறை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தற்போதைய ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையே இந்தத் துயரத்திற்குக் காரணம் என்று சாடியுள்ளார்.

சென்னையில் தொடர் மின்வெட்டு மற்றும் பொதுமக்களின் அவதி

அம்பத்தூர், பெரம்பூர், அரும்பாக்கம், மாங்காடு, மேடவாக்கம் உள்ளிட்ட தலைநகர் சென்னையின் பெரும்பாலான முக்கியப் பகுதிகளில் நேற்றிரவு முழுவதும் பல மணி நேரம் தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையான கோடை வெப்பத்தைத் தாங்க முடியாமல், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் குழந்தைகள் எனப் பொதுமக்கள் அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த மின்வெட்டுப் பிரச்சினை தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நிர்வாகத் தோல்விக்கு மிகச்சிறந்த சான்றாக அமைந்துள்ளது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

பொய் வாக்குறுதிகளும் மக்களின் ஏமாற்றமும்

தேர்தல் சமயத்தில் “ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இருநூறு யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்” என்று தமிழக மக்களுக்குப் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசியது தமிழக வெற்றிக் கழக அரசு. இந்த வெற்று வார்த்தைகளை நம்பி வாக்களித்த மக்கள், இன்று சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தைத் தாங்க இயலாமல், தங்களது பச்சிளம் குழந்தைகளுடன் நடுத்தெருவில் இறங்கி மின்சாரத்திற்காகப் போராட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தச் சூழல் மிகுந்த வேதனையை அளிப்பதாக அவர் தனது பதிவில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

அரசின் சாக்குப்போக்குகளுக்குக் கண்டனம்

கடந்த ஆட்சிக் காலத்தில் மின்வெட்டு ஏற்படும் போதெல்லாம், அணில்களால் தான் மின்கம்பிகளில் பழுது ஏற்பட்டு மின்சாரம் தடைபடுகிறது என்று விசித்திரமான காரணங்களைக் கூறி கதை கட்டினார்கள். ஆனால், தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், மின் உபகரணங்கள் மற்றும் மின்சாரக் கம்பிகள் திருடப்படுவதால் தான் மின்வெட்டு உண்டாகிறது என்று கூறி மக்களின் காதில் பூ சுற்றுகிறார்கள். மொத்தத்தில் தமிழ்நாட்டில் ஆட்சி மட்டும்தான் மாறியிருக்கிறதே தவிர, முந்தைய ஆட்சியின் அவலக் காட்சியும் மாறவில்லை, மக்களின் அன்றாடக் கவலைகளும் தீரவில்லை என்று நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமைச்சர் பதவி விலகக் கோரிக்கை

தனது பொறுப்பிலுள்ள சொந்த மின்சாரத் துறை இப்படி இருளில் மூழ்கிக் கிடப்பதையும், பொதுமக்கள் படும் அவதிகளையும் சீரமைக்கக் கவனிதகாமல், திருப்பரக்குன்றம் தீபத்தூணை ஒளிர விட மாட்டோம் எனத் தேவையற்ற விவகாரங்களில் முட்டி மோதிக் கொண்டிருக்கும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமாருக்கு, அடிப்படை அரசுப் பதவி வகிக்கக் கூட எந்தத் தகுதியும் இல்லை என்று அவர் சாடியுள்ளார். உடனடியாகத் தமிழக அரசு தலையிட்டு மின் விநியோகத்தைச் சீரமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.