சென்னை: தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது கூறியதாவது:

“முதல்-அமைச்சரின் சிந்தனையில் உருவான பக்தர் நலன் பயக்கும் முக்கிய திட்டங்களில் ஒன்றான ‘ராமநாத சுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம்–காசி பயணம்’ வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து 602 பக்தர்கள் காசி நோக்கிப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் டிசம்பர் 12 அன்று திரும்பி வருவார்கள். பயணிகளின் பாதுகாப்பிற்காக அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் அனுப்பப்பட்டுள்ளனர். பயணிகளுக்கு தேவையான 18 வகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒருவருக்கு ரூ.27,500 செலவாகும் இந்த திட்டத்திற்கு அரசு 3 கோடி 80 லட்சம் ரூபாய் மானியம் வழங்கியுள்ளது.

இதுவரை 1,520 பேர் ராமேஸ்வரம்–காசி பயணத்தில் பயனடைந்துள்ளனர். முதல்-அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தொடங்கப்பட்ட ஆன்மீகப் பயணத் திட்டத்தில் மொத்தம் 3,815 பேர் பயணம் செய்துள்ளனர். இதற்காக அரசு 4 கோடி 64 லட்சம் ரூபாய் மானியம் வழங்கியுள்ளது. ஆடி மாத அம்மன் சுற்றுலா, புரட்டாசி மாத வைணவ திருக்கோவில் பயணங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர். முக்திநாத் யாத்திரை, மானசரோவர் பயண உதவித் தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளன. மொத்தம் 11,998 பேர் ஆன்மீகப் பயணங்களில் பயனடைந்துள்ளனர். இதற்காக அரசு 11 கோடி 13 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.

திருவிளக்கு பூஜை புனரமைக்கப்பட்டு, ஒவ்வொரு பவுர்ணமியிலும் 108 சுமங்கலிப் பெண்கள் பங்கேற்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 81,540 பெண்கள் பங்கேற்றுள்ளனர். 2,064 கோவில் குளங்களில் 450 குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. 700 திருக்கோவில் தேர்களுக்கு பாதுகாப்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜனவரி மாத இறுதிக்குள் 4,000 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்.

தமிழ்நாடு அரசு நீதிமன்ற உத்தரவுகளை மதிக்கிறது. இன, மத மோதல்களைத் தடுப்பதே அரசின் குறிக்கோள். பக்தியை வைத்து பகை வளர்க்கக் கூடாது. சமாதானமே இறைக்கொள்கை. வடக்கில் நடந்ததைப் போல தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் உருவாக்க முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் இது ராமானுஜர் வாழ்ந்த மண், எல்லோருக்கும் எல்லாமுமான மண்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் இரும்பு மனிதராக மதிக்கப்படுகிறார். அவருடைய ஆட்சியில் பிரிவினை சக்திகள் ஒருநாளும் எடுபடாது; அவை இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும். சட்டத்தின் ஆட்சியில், இன–மத மோதல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும். மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டும் போராட்டத்தை முதல்-அமைச்சர் நடத்துவார்.

திருவண்ணாமலை உள்ளிட்ட 66 கோவில்களில் கார்த்திகை தீபத்திருநாளன்று ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். மக்களைப் பிரிக்கும் சூழ்ச்சியாளர்கள் வெற்றிபெற மாட்டார்கள். வரலாற்றில் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் பெயர்கள் பதிவானது போல, எதிர்காலத்தில் ‘திராவிட மாடல் ஆட்சியின் நாயகன், எங்கள் உயிரினும் மேலான அன்புத் தலைவர் மு.க.ஸ்டாலின்’ என்ற பெயர் நிலைத்திருக்கும்.

அ.தி.மு.க. தற்போது எடுக்கும் நிலைப்பாடுகள் அனைத்தும் டெல்லியில் இருந்து உள்துறை மந்திரி அமித்ஷா கூறுவதைப் போலவே உள்ளது. அவர்கள் தங்கள் கொள்கைகள், கோட்பாடுகளை பா.ஜ.க.விடம் அடிமை சாசனம் எழுதி தந்துவிட்டனர். 2014, 2017 காலகட்டங்களில் அ.தி.மு.க. ஆட்சியே திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை மாற்ற அனுமதி மறுத்து நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. ஆனால் இன்று அதே விஷயத்தில் வேறு நிலைப்பாடு எடுப்பது போலித்தனமானது.”

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.