ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தை முறைப்படி திறந்து வைத்தார்.

புதிய முனையத்தின் சிறப்பம்சங்கள் சுமார் 23,000 சதுர மீட்டர் பரப்பளவில், 480 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த புதிய முனையக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட இந்த முனையம், பயணிகளுக்கு நவீன மற்றும் தடையற்ற வசதிகளை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கட்டிடக்கலையானது, ராஜஸ்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க அரச பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில், பாரம்பரிய வளைவுகள் மற்றும் ‘ஜரோகா’ (Jharokha) எனப்படும் அலங்கார ஜன்னல்கள் போன்ற அம்சங்களுடன் நவீன வடிவமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

‘உடான்’ திட்டத்தின் புதிய கட்டம் புதிய முனையத்தைத் திறந்து வைத்ததோடு, திருத்தப்பட்ட ‘உடான்’ (UDAN – Ude Desh ka Aam Nagrik) திட்டத்தின் அடுத்த கட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 28,840 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், நாட்டின் வான்வெளி போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்துவதையும், சாமானிய மக்களும் விமானப் பயணங்களை மேற்கொள்ள ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ராஜஸ்தானின் வளர்ச்சிக்கு வித்திடும் திட்டங்கள் இதனைத் தொடர்ந்து, பலோத்ராவில் 1.06 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார். இவை நகர்ப்புற போக்குவரத்து, ரயில்வே உள்கட்டமைப்பு என மாநிலத்தின் பல்வேறு முக்கியத் துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. விமான நிலைய வரவேற்பின் போது, ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாவ் பகாடே, மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் மற்றும் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.