பொள்ளாச்சியில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், அந்தப் பணத்தைத் திருப்பி ஒப்படைக்க தலைமை காவலர் ஒருவர் பொதுமக்களிடம் கெஞ்சும் ஆடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி பொள்ளாச்சியைச் சேர்ந்த முகேஷ் என்பவருக்கும், ஏற்கனவே திருமணமாகி கணவருடன் வசித்து வந்த பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க, அந்தப் பெண் தனது கணவருடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த பிறகு, இந்த விவகாரத்தில் பிரச்சனையைத் தூண்டியதாக முகேஷ் மீது புகார் எழுந்தது.

காவல் நிலையத்தில் நடந்தது என்ன? இதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்திற்கு முகேஷ் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு உதவி ஆய்வாளர் ஜான்சன், முகேஷிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது, இனிமேல் இந்தப் பெண்ணின் விவகாரத்தில் தலையிடக்கூடாது என்று மிரட்டியதோடு, அவரிடம் 5,000 ரூபாய் லஞ்சமாகப் பெற்றதாகத் தெரிகிறது.

வைரலாகும் ஆடியோ லஞ்சம் வாங்கிய விஷயம் உயர் அதிகாரிகளுக்குத் தெரிந்துவிடுமோ அல்லது சிக்கல் ஏற்படும் என்று அஞ்சிய உதவி ஆய்வாளர் ஜான்சன், உடனடியாக அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு தலைமை காவலர் நாகராஜனிடம் கூறியுள்ளார். இதன்படி, தலைமை காவலர் நாகராஜன் முகேஷைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

அந்த உரையாடலில், “ஜான்சன் சார் பணத்தைத் திருப்பிக் கொடுக்கச் சொன்னார், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?” என்று நாகராஜன் கேட்கிறார். அதற்கு முகேஷ், தான் ஊரில் இல்லை என்றும், கோவை சென்றுவிட்டதாகவும், இப்போது வர முடியாது என்றும் பதிலளிக்கிறார். ஆனால், விடாப்பிடியாகப் பணத்தை வந்து பெற்றுக்கொள்ளுமாறு தலைமை காவலர் வற்புறுத்துகிறார்.

பதறிப்போன முகேஷ் அதற்கு முகேஷ், “காலில் வேண்டுமானாலும் விழுகிறேன், அந்த 5,000 ரூபாய் கொடுத்ததாகவே இருக்கட்டும். எனக்குப் பணம் வேண்டாம். இந்த பிரச்சனையில் இருந்து என்னை விடுவித்தால் போதும். அந்தப் பெண் திருமணம் ஆகவில்லை என்றுதான் என்னிடம் பழகினார், இனி நான் எந்தப் பிரச்சனைக்கும் வரமாட்டேன்” என்று மிகுந்த மனவேதனையுடன் கூறுகிறார்.

இந்த ஆடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரி, பயந்து போய் பணத்தைத் திருப்பித் தர முயற்சிப்பதும், அதற்குப் பாதிக்கப்பட்ட நபர் கதறுவதும் காவல் துறையின் மீதான நம்பகத்தன்மையைச் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.