திருச்சி,

தமிழக அரசியல் பரப்பில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகள் தங்களது தேர்தல் ஆயத்தப் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சியும் அதே உற்சாகத்துடன் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

திரைப்பட இயக்குனரும், நடிகருமான சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சி, 2010-ம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன் பிறகு 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலிருந்து இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்டு வருகிறது.

2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் 1.07 சதவீத வாக்குகளைப் பெற்று தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த நாம் தமிழர் கட்சி, 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 3.9 சதவீத வாக்குகளைப் பெற்று வளர்ச்சியடைந்தது. அதனைத் தொடர்ந்து, 2021 சட்டசபைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 6.58 ஆக உயர்ந்தது. 2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 8.2 சதவீத வாக்குகளைப் பெற்று அரசியல் ரீதியாக வலுவான முன்னேற்றத்தை பதிவு செய்தது.

ஒரு அரசியல் கட்சி மாநில அளவில் 8 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றால், இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி மாநில கட்சியாக அங்கீகரிக்கப்படும். அந்த அடிப்படையில், கட்சி தொடங்கிய 15 ஆண்டுகள் கழித்து, நாம் தமிழர் கட்சி கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக மாநில கட்சி அந்தஸ்தைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி எந்தக் கூட்டணியிலும் இணையாது தனித்தே போட்டியிடும் என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே அறிவித்துள்ளார். “மாற்றத்தை விரும்பும் மக்களின் அரசியல்” என்ற கோஷத்துடன் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள சீமான் தலைமையிலான கட்சி, இந்த முறை அரசியல் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.

இதற்காக, இன்று திருச்சியில் “மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026” என்ற பெயரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் களமிறங்கவுள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகின்றனர். அதோடு, சீமான் தாம் எந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பதையும் அறிவிக்க உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் இம்மாநாடு கட்சியின் அடுத்த கட்ட அரசியல் தீர்மானத்திற்கான முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெரும் திரளானோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாநாடு வழியாக, வரும் தேர்தலுக்கான கட்சியின் திட்டங்கள், பிரச்சாரத் தந்திரங்கள் மற்றும் மக்களுக்கு அளிக்கப்படும் தேர்தல் அறிக்கை குறித்த முக்கிய வழிகாட்டுதல்களையும் சீமான் அறிவிப்பார் எனத் தெரிகிறது.

இதன்மூலம், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி முழு அளவிலான போட்டியைத் தொடங்கும் வரலாற்றுச் சந்திப்பாக திருச்சி மாநாடு அமைந்துள்ளது.