சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “ஏன் இப்போது இருக்கிற சட்டசபையில் உட்கார முடியவில்லையா? புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், அரசு ஏற்கெனவே செயல்பட்டு வரும் தலைமைச் செயலகத்தைக் கைவிட்டு புதிய வளாகத்துக்காக பெரும் தொகை செலவிடுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அரசு நிர்வாகத்துக்கு தேவையான கட்டட வசதி தற்போது இல்லையா என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.

தமிழக அரசு பட்டினப்பாக்கம்–Foreshore Estate பகுதியில் சுமார் 25.55 ஏக்கர் நிலத்தில், 20 லட்சம் சதுர அடியில், சுமார் ₹1,200 கோடி மதிப்பில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக ஒருங்கிணைந்த வளாகம் அமைக்க முதற்கட்ட அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான Detailed Project Report மற்றும் செலவு மதிப்பீட்டை தயார் செய்ய பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு சீமான் மட்டுமல்லாமல், அப்பகுதி மீனவர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக பட்டினப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராம மக்கள், புதிய வளாகம் அமைந்தால் கடற்கரை அணுகல், மீன்பிடித் தொழில், குடியிருப்பு மற்றும் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

திட்டம் அமையும் பகுதியைச் சுற்றி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் குடியிருப்புகள் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். அதேபோல் கடலோர சூழல் மற்றும் மீனவர் வாழ்வாதாரம் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. மறுபுறம், திருச்சியை இரண்டாவது தலைநகராக உருவாக்கி அங்கு புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க வேண்டும் என்ற யோசனையையும் மதிமுக எம்.பி. துரை வைகோ முன்வைத்துள்ளார்.