நாம்சி:

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் சுரங்கம் அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நச்சு வாயு கசிவு காரணமாக 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்த விவரங்களைச் சிக்கிம் மாநில முதலமைச்சர் பிரேம் சிங் தமங் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சுரங்க விபத்தும் நிலச்சரிவும்

சிக்கிம் மாநிலத்தின் நாம்சி மாவட்டத்தில் உள்ள ஜொலுங்கே நகருக்குட்பட்ட சமர்டங் பகுதியில் சுரங்கம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், இப்பகுதியில் நேற்று மதியம் எதிர்பாராதவிதமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சுரங்கப் பகுதி திடீரென இடிந்து விழுந்ததில், அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த 27 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் மாவட்ட ஆட்சியர் அனுபா தம்லிங் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் (NDRF & SDRF), சிக்கிம் காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் அவசரகாலப் பணியாளர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

இந்த கோர விபத்து குறித்துச் சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமங் செய்தியாளர்களிடம் இன்று விரிவாகக் கூறுகையில், “நிலச்சரிவு காரணமாகச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரங்களைக் கேட்டறிந்ததுடன், மத்திய அரசு தரப்பில் இருந்து தேவையான அனைத்துச் சாத்தியமான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, சுரங்க விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு கேங்டாக் நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்படுகின்றன. சுரங்கத்திற்குள் இன்னும் சிக்கியுள்ள மீதமுள்ள தொழிலாளர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணியில் மீட்புப் படைவீரர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

வாயு கசிவால் மீட்புப் பணியில் தொய்வு

சுரங்கத்திற்கு உள்ளே மேற்கொண்டுவரும் மீட்புப் பணிகளுக்குப் பல்வேறு இயற்கைத் தடைகள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவிக்கையில், “சுரங்கத்திற்குள் ஆபத்தான முறையில் வாயு கசிவு காணப்படுகிறது. நிலச்சரிவின் காரணமாகப் பூமிக்கு அடியில் இருந்து இயற்கையாகவே இந்த நச்சு வாயு கசிவு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த நச்சு வாயு காரணமாக, மீட்புப் பணியில் ஈடுபட்டுவரும் வீரர்கள் பலருக்குச் சோர்வு, மயக்கம் மற்றும் சுயநினைவை இழக்கும் ஆபத்தான சூழல் ஏற்படுகிறது. இதனால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் கடுமையான தொய்வும் தாமதமும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் தீவிரமாகப் போராடி வருகின்றனர்” என்றனர்.

இந்தத் திடீர் விபத்து சிக்கிம் மாநிலத்தேயும், தொழிலாளர்களின் குடும்பத்தினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.