
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவ கருட சேவைக்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம் திருமலைக்கு கொண்டு செல்லப்படுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது.
இந்த புனித மாலைகள் பொதுவாக “ஆண்டாள் மாலை” அல்லது “சிகாமணி மாலை” என அழைக்கப்படுகின்றன. முதலில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு சாற்றப்பட்ட பின்னர், அவை சிறப்பு பூஜைகளுடன் திருமலைக்கு கொண்டு செல்லப்பட்டு, கருட சேவை நாளில் மூலவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரருக்கும் உற்சவர் மலையப்பசாமிக்கும் அணிவிக்கப்படுகின்றன.
ஆண்டாள், பெருமாளுக்கு அர்ப்பணிக்கப்படும் பூமாலையை முதலில் தானே சூடி பார்த்ததாக வைணவ மரபு கூறுகிறது. இதனாலேயே அவர் “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என போற்றப்படுகிறார். இந்த மரபின் தொடர்ச்சியாக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருப்பதிக்கு மாலை அனுப்பும் வைபவம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவமும் தற்போது நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 19 அன்று தங்கக் கருட சேவை, செப்டம்பர் 20 அன்று திருக்கல்யாணம், செப்டம்பர் 23 அன்று செப்புத் தேரோட்டம் நடைபெறவுள்ளதாக கோவில் தரப்பு தெரிவித்துள்ளது.