ஷார்ஜா,

துபாயில் நடைபெற்று வரும் 6 அணிகள் இடையிலான சர்வதேச டி20 லீக் தொடரில், அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் டெசர்ட் வைப்பர்ஸ் அணிகள் கடந்த 5-ம் தேதி மோதின.

முதலில் பேட்டிங் செய்த அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. இதில் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிகபட்சமாக 53 ரன்கள் அடித்தார். அவருக்கு அடுத்து ரசல் 36 ரன்கள் பங்களித்தார்.

172 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெசர்ட் வைப்பர்ஸ் அணி, 19.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹெட்மயர் 48 ரன்கள் அடித்து அணிக்கு முக்கிய பங்களிப்பு செய்தார்.

இந்த ஆட்டத்தில் ரசல் பந்துவீச்சில் ஒரு விக்கெட் வீழ்த்தினார். அந்த விக்கெட், அவரது டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் 500-வது விக்கெட்டாக பதிவானது. இதற்கு முன் அவர் டி20 போட்டிகளில் 9,496 ரன்களும், 772 சிக்சர்களும் அடித்துள்ளார்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 5,000க்கும் மேற்பட்ட ரன்கள், 500 விக்கெட்டுகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடித்த உலகின் முதல் மற்றும் ஒரே வீரர் என்ற அபூர்வ சாதனையை ரசல் படைத்துள்ளார்.

இந்த சாதனை, டி20 கிரிக்கெட்டின் பல்வேறு பரிமாணங்களில் அவர் காட்டிய திறமையை வெளிப்படுத்துகிறது. பேட்டிங், பந்துவீச்சு, சிக்சர்கள் என மூன்று துறைகளிலும் சமநிலையான திறமையை வெளிப்படுத்தியுள்ளதால், ரசல் உலகளாவிய டி20 கிரிக்கெட் ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார்.

குறிப்பாக, இவர் சமீபத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.