
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் 1,508 ஏரிகள் முழுமையாக வறண்டு கிடக்கின்றன என நீர்வளத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 14 ஆயிரத்து 141 பாசன ஏரிகள் உள்ளன. அவற்றில் 689 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. மேலும் 1,273 ஏரிகள் 76 முதல் 99 சதவீதம் வரை நீர் நிரம்பியுள்ளன. 2,292 ஏரிகள் 51 முதல் 75 சதவீதம் வரை நிரம்பியுள்ள நிலையில், 3,657 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும், 4,722 ஏரிகள் 1 முதல் 25 சதவீதமும் மட்டுமே நீர் கொண்டுள்ளன.
ஆனால் 1,508 ஏரிகள் முழுமையாக வறண்டு கிடப்பது கவலைக்கிடமான நிலையை உருவாக்கியுள்ளது. இதில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டத்தில் 380 ஏரிகள் வறண்டுள்ளன. அதனை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் 264 ஏரிகள், திண்டுக்கல்லில் 129 ஏரிகள், திருநெல்வேலியில் 84 ஏரிகள், திருச்சியில் 82 ஏரிகள், நாமக்கல்லில் 53 ஏரிகள், தேனியில் 50 ஏரிகள் மற்றும் சேலத்தில் 42 ஏரிகள் தண்ணீர் இன்றி உள்ளன.
தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இன்னும் அக்னி நட்சத்திர வெயில் தொடங்காத நிலையில் கூட இந்த நிலை உருவாகியுள்ளது.
இதனால் வரும் நாட்களில் மேலும் பல ஏரிகள் வறண்டு போகும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு மற்றும் ஏரி பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசரமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.