தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று அவையில் ஒரு மிக முக்கியமான அரசுத் தீர்மானம் முன்மொழியப்பட்டது. பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்தத் தீர்மானத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 தொடர்பாகவும், அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்தும் விரிவாக விளக்கினார்.

அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், “வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 ஆனது தற்போதுள்ள அதன் வடிவில் பல சிக்கல்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, எப்.சி.ஆர்.ஏ. பதிவு காலாவதியாதல், புதுப்பிக்கப்படாமல் போவது, புதுப்பிப்பு மறுக்கப்படுவது, அல்லது பதிவு ரத்து செய்யப்படுவது போன்ற காரணங்களால், தொண்டு நிறுவனங்களின் சொத்துகளை அரசிடம் ஒப்படைப்பது, அவற்றை நிர்வகிப்பது, மாற்றுவது மற்றும் விற்பனை செய்வது தொடர்பான கடுமையான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள் குறித்து இந்தச் சட்டமன்றம் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது” என்றார்.

மேலும், இந்த கடுமையான விதிகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சி அதிகாரத்தை முற்றிலுமாகப் பறித்துவிடும் என்றும், குறிப்பாகச் சிறுபான்மையினர் நடத்தி வரும் கல்வி மற்றும் சமூகநல நிறுவனங்களின் இயல்பான செயல்பாடுகளுக்கு இது பெரும் தடையாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தொண்டு மற்றும் சமூக அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்பட இந்த மசோதாவின் தற்போதைய வடிவத்தில் திருத்தங்கள் தேவையா என்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றார்.

இதன் அடிப்படையில், “வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026-ஐ அதன் தற்போதைய வடிவில் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மேலும், இது தொடர்பாக மாநில அரசுகள், தொண்டு நிறுவனங்கள், மத அமைப்புகள், கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து முக்கியப் பங்குதாரர்களுடனும் மத்திய அரசு விரிவான ஆலோசனைகளை நடத்த வேண்டும்” என்று இம்மன்றம் வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

எந்தவொரு புதிய திருத்த மசோதாவும் இயற்கை நீதி, விகிதாசாரம், சொத்துரிமைப் பாதுகாப்பு, நியாயமான எதிர்பார்ப்பு மற்றும் இந்திய நாட்டின் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை முழுமையாக உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில், வெளிநாட்டு பங்களிப்புகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு அவசியம்தான் என்றாலும், சட்டப்பூர்வமாகச் செயல்படும் தொண்டு, கல்வி, மருத்துவ, மத, கலாச்சார மற்றும் சமூகநல அமைப்புகளின் உரிமைகள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.

எனவே, தொண்டு மற்றும் சிறுபான்மை நிறுவனங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026-ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தத் தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக அமைச்சர் ராஜ்மோகன் தனது உரையில் தெரிவித்தார்.