தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 2026-2027ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் மூன்றாவது நாளாக இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், தமிழகத்தில் மாணவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நீட் தேர்வு முறைக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க அரசினர் தனித் தீர்மானம் ஒன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கோ.க.அருண்ராஜ் இந்தத் தனித் தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் முன்மொழிந்து உரையாற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர் அருண்ராஜ், “தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் முறை என்பது முழுக்க முழுக்க சமூக நீதி, சமத்துவம் மற்றும் மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிரானதாகவே உள்ளது. குறிப்பாக, தமிழ் வழிக் கல்வியில் பயிலும் மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் மற்றும் சமூக, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை இத்தேர்வு முறை கடுமையாகப் பாதிக்கிறது. நீட் தேர்வால் எந்தவித வரம்புமின்றி அதிக அளவில் கட்டணம் வசூலிக்கும் தனியார் பயிற்சி மையங்கள் பெருமளவில் காளான் போல் வளர்ந்து வருகின்றன. இதனால் மாணவர்கள் தங்களது பள்ளிப் பாடத்திட்டத்தைக் கவனமாகப் படிப்பதில் இருந்து திசைதிருப்பப்பட்டு, நீட் பயிற்சி மையங்களை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்” என்று சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பெறும் அறிவை முழுமையாகப் புறந்தள்ளிவிட்டு, ஒரே ஒரு நாள் நடக்கும் நுழைவுத் தேர்வு மட்டுமே அவர்களின் ஒட்டுமொத்த உயர் கல்வியைத் தீர்மானிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி கடந்த 2021ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டமுன்வடிவு (சட்ட முன்வடிவு எண் 43/2021) சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், அந்தச் சட்ட முன்வடிவுக்கு ஜனாதிபதியின் ஏற்பிசைவு இன்னும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், சமீபகாலமாகத் தொடர்ந்து நடைபெறும் வினாத்தாள் கசிவுகள் மற்றும் முறைகேடுகள் காரணமாக, நீட் (இளநிலை) 2026 தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்படும் சூழல் உண்டானது. இதனால் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகளுக்குச் சொல்லொணாத் துயரமும், இளம் மாணவர்களின் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நம்பிக்கையை இத்தேர்வு முறை முற்றிலும் இழந்துவிட்டதால், இது உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நீட் தேர்வுகளில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் முறைகேடுகளைக் கருத்தில் கொண்டு, நீட் நுழைவுத் தேர்வு முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். அதற்காக, 2019ஆம் ஆண்டின் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் மற்றும் 2020ஆம் ஆண்டின் இந்திய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதிக்கான தேசிய ஆணையச் சட்டங்கள் உள்ளிட்ட தொடர்புடைய பிற மையச் சட்டங்களில் மத்திய அரசு உடனடியாகத் தேவையான திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று இச்சட்டமன்றப் பேரவை வலியுறுத்துகிறது. இதன் மூலம், மாணவர்கள் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாநிலத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வழிவகை செய்ய வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்தத் தனித் தீர்மானத்திற்கு அவையில் இருந்த பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் தங்களது முழுமையான வரவேற்பைத் தெரிவித்தனர். எனினும், இத்தீர்மானத்தை எதிர்த்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார். அதனைத் தொடர்ந்து, நீட் தேர்வுக்கு எதிரான இந்த அரசினர் தனித்தீர்மானம் சபையின் முடிவுக்கு விடப்பட்டது. தீர்மானத்தை எதிர்த்து மறுப்பு தெரிவிக்க யாருமில்லாத காரணத்தினால், இத்தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்