தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு தங்கள் தொகுதியின் தேவைகள் மற்றும் குறைகள் குறித்து பேசி வருகின்றனர். இந்நிலையில், திருவெறும்பூர் தவெக எம்.எல்.ஏ. விஜி சட்டப்பேரவையில் உரையாற்றும்போது கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.
அவர் பேசுகையில், “எனது திருவெறும்பூர் தொகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களுக்கான உண்மையான இடங்கள் களத்தில் கிடையாது. வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு போலி பட்டாக்களை வழங்கியுள்ளார்கள். வேண்டுமென்றால் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பார்க்கட்டும்” எனத் தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சுக்கு திமுக தரப்பில் உடனடியாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் தவெக எம்.எல்.ஏ. விஜி தொடர்ந்து பேச முயன்றதுடன், எதிர்க்கட்சிகளைப் பார்த்து “அனைவரும் உட்காருங்கள், நான் உண்மையைத்தான் பேசுகிறேன்” என்று ஆவேசமாகக் கூறினார்.
தொடர்ந்து தவெக எம்.எல்.ஏ. பேசுவதைத் நிறுத்தாததாலும், சபையில் சலசலப்பு நீடித்ததாலும் டென்ஷன் ஆன பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், “முதலில் நீங்கள் உங்கள் இருக்கையில் உட்காருங்கள்” என்று அவரை கடிந்து கொண்டார். இதனிடையே, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், “கடந்த ஆட்சியில் ஒரு இடத்தை தேர்வு செய்து பட்டா வழங்கப்பட்டிருக்கக்கூடும். அந்தப் பட்டாக்கள் லே-அவுட் செய்யப்பட்டு விரைவில் முறையாக வழங்கப்படும். பல இடங்களில் இதுபோன்ற குறைபாடுகள் இருப்பது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வு விலக்கு தீர்மானம் தொடர்பாக அமைச்சர் விஸ்வநாதன் சட்டப்பேரவையில் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென திமுக எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதன் எதிர்வினையாக தவெக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினார்கள். இதனால் அவையில் பெரும் அமளி துமளி உண்டானது.
அப்போது ஆவேசமடைந்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், சட்டமன்ற உறுப்பினர்களை நோக்கி கடும் எச்சரிக்கை விடுத்தார். அவர் பேசுகையில், “சட்டமன்ற உறுப்பினர்கள் ஒழுங்கீனமாக அவையில் நின்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று திமுக மற்றும் தவெக எம்.எல்.ஏக்களை எச்சரித்தார். முன்னதாக, சூலூர் தவெக எம்.எல்.ஏ. சுகுமார் திமுகவை விமர்சித்து பேசியபோது சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தவிர்க்குமாறு சபாநாயகர் அறிவுரை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.