கோவை:

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வலுவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் கூட்டணிகள், தொகுதி பங்கீடுகள் மற்றும் பிரச்சார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவையில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “கொங்கு மண்டலம் என்பது தமிழக அரசியலில் கோட்டையின் சாவி போன்றது. அந்தச் சாவியைச் சரியான தலைமையிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது” என்று வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் பேசியதாவது:
“மக்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளும் போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்படும். இன்னும் 70 முதல் 75 நாட்களில் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும். மக்கள் கடந்த பல ஆண்டுகளாக இரண்டு பெரிய கட்சிகளை பார்த்து விட்டார்கள். இப்போது அவர்கள் ஒரு புதிய தலைமையையும், நேர்மையான, இளமைத் துடிப்புள்ள தலைவரையும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்புக்கு ஒரே பதில் நம் தலைவர் தான்.” எனக் கூறினார்.

அவர் தொடர்ந்து, “கோவை மாவட்டத்தின் சிறுவாணி நீருக்கு ஒரு தனிச் சுவை இருக்கிறது; அதுபோல் கோவை மண்ணின் அரசியலுக்கும் தனித்துவமான சக்தி உள்ளது. அந்த சக்தியை இன்னும் வலுப்படுத்தி, தமிழக அரசியலைச் சீரமைக்க நம் தலைவர் கோட்டையை நோக்கி புறப்பட்டுள்ளார். அரசியல் என்பது சிலருக்கு தொழில் ஆக இருக்கலாம். ஆனால் நம் தலைவருக்கு அது ஒரு சமூகப் பொறுப்பு. கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் நலத்திட்டங்கள், சமூக சேவைகள் அனைத்திலும் அவர் தன்னலமின்றி உழைத்து வருகிறார்,” என்று தெரிவித்தார்.

கூட்டணி குறித்தும் அவர் பேசியபோது, “நாம் யாருடைய அடிமையுமல்ல. பதவிக்காக யாரிடம் செல்வது நம் வழியல்ல. பதவி நம்மைத் தேடி வர வேண்டும். அதுதான் நம் அரசியல் நெறி. இன்று பல கட்சிகள் கூட்டணிகளை வைத்து அரசியல் கணக்குப் போடுகின்றன. ஆனால் நம் தலைவர் மக்களுடன் நேரடியாக நின்று பேசும் தைரியம் கொண்டவர். கூட்டணி குறித்துப் பயப்பட வேண்டாம். ஒரே மனிதர் நம் ‘விசில்’ சின்னத்துடன் நிற்பதற்கே 500 பேரின் வலிமை இருக்கும்,” எனக் கூறினார்.

அவர் மேலும், “2026 தேர்தலில் கொங்கு மண்டலம் முழுவதும் தவெக கொடி பறக்கும். கோயம்புத்தூர் உட்பட அனைத்து தொகுதிகளும் தமிழக வெற்றி கழகத்தின் கோட்டையாக மாறும். நம் தலைவரை 2026 மே மாதத்தில் முதலமைச்சர் இருக்கையில் அமர வைப்பதே நம் குறிக்கோள். மக்கள் நமக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள். நாம் அவர்களைச் சரியாகச் சென்றடைந்தால் போதும்,” எனக் குறிப்பிட்டார்.

புஸ்ஸி ஆனந்தின் இந்த உரை, தவெக கட்சியின் கொங்கு மண்டல அரசியல் வியூகம் மற்றும் அடுத்த கட்ட தேர்தல் திட்டங்கள் குறித்து தெளிவான சிக்னலாகக் கருதப்படுகிறது. தவெக தற்போது கொங்கு மண்டலத்தை அரசியல் ரீதியாக வலுப்படுத்தி, அதனை கோட்டைக்கு வழிகாட்டும் முக்கிய மையமாக மாற்றும் முயற்சியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.