சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து அதிரடி முன்னிலை பெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி அக்கட்சி 103 இடங்களில் முன்னிலை வகித்தது. இதன் காரணமாக இரு திராவிடக் கட்சிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொடங்கப்பட்டு வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், தமிழக வெற்றிக் கழகம் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் மற்ற முக்கியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

அதே நேரத்தில் அதிமுக கூட்டணி 75 இடங்களிலும், திமுக கூட்டணி 55 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தது. ஆட்சி செய்த அனுபவம் கொண்ட இரு திராவிடக் கட்சிகளை விடவும், புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே இத்தனை பெரிய முன்னிலை கிடைத்திருப்பது, மாநில அரசியலில் புதிய சமன்பாடுகள் உருவாகும் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் தமிழக அரசியலில் புதிய கட்சிகள் உடனடியாக இத்தகைய வெற்றியை எட்டுவது அரிதாகவே இருந்துள்ளது. எம்ஜிஆர் கட்சி தொடங்கி பின்னர் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்ததற்கு கூட பல கட்ட அரசியல் பயணம் இருந்தது. திமுகவும் தொடங்கிய சில ஆண்டுகளில் அல்ல, நீண்ட போராட்டத்துக்குப் பிறகே ஆட்சியை கைப்பற்றியது. தேமுதிகவும் தேர்தல் அரசியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்க பல ஆண்டுகள் எடுத்தது. அந்த வரிசையில், தமிழக வெற்றிக் கழகம் குறுகிய காலத்திலேயே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.

தவெக எந்தக் கட்சியின் வாக்குகளை அதிகம் பிரிக்கும் என்ற கேள்வி தேர்தலுக்கு முன்பே எழுந்திருந்தது. தற்போதைய நிலவரப்படி, அந்த வாக்குகளில் பெரும்பகுதி திமுகவின் ஆதரவு வங்கியில் இருந்து வந்திருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். திமுகவில் 31 அமைச்சர்களில் முதல்வர் ஸ்டாலின் உட்பட 23 பேர் பின்னடைவை சந்தித்திருப்பதும், ஆளும் தரப்புக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது.

சென்னை, திருநெல்வேலி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தவெக பலத்த ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கை பெரிதும் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பல தொகுதிகளில் தொடக்கம் முதல் முன்னிலை நிலை மாறாமல் தொடர்வதும், அந்தக் கட்சியின் வாக்கு வலிமையை வெளிப்படுத்துகிறது.

மூன்று முதல் நான்கு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையிலும், தவெக வேட்பாளர்கள் பல இடங்களில் நிலையாக முன்னிலையில் உள்ளனர். சுமார் 41 தொகுதிகளில் திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பதும், இன்னும் முடிவுகள் முழுமையாக தெளிவாகாத சூழலில் பரபரப்பை அதிகரித்துள்ளது. தற்போதைய போக்கு தொடர்ந்தால், தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை நோக்கி பயணிக்கலாம் என்ற கணிப்பும் வலுப்பெற்றுள்ளது.

மொத்தத்தில், இந்தத் தேர்தல் தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதக்கூடியதாக மாறியுள்ளது. விஜய்யின் கட்சி குறுகிய காலத்தில் பெற்றுள்ள இந்த முன்னிலை, வழக்கமான அரசியல் கணக்குகளை முற்றிலும் மாற்றும் வகையில் உள்ளது.